பெண்களுக்கு எதிரான கொடுமையை தடுக்க புதிய சட்ட மசோதா தாக்கல்

08/12/2010 10:46

பணிபுரியும் இடங்களில் பெண்களிடம் செக்ஸ் கொடுமையை தடுப்பதற்கான புதிய சட்ட மசோதா, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி கிருஷ்ணா திரத், இந்த புதிய சட்ட மசோதாவை அறிமுகம் செய்தார். இந்த சட்ட மசோதாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

ஜாடை காட்டி மறைமுகமாகவோ அல்லது சலுகை தருவதாக ஆசைகாட்டியோ மேற்கொள்ளப்படுவது உள்ளிட்ட பெண் ஊழியர்களுக்கு எதிரான செக்ஸ் கொடுமை பற்றி புகார் அளிக்கலாம்.


அந்த புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக சட்டப்பூர்வ அமைப்பு ஒன்றை தொழில் நிறுவனங்களில் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்கள், துணை கலெக்டர்கள், மாவட்ட மாஜிஸ்திரேட்டு அல்லது கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட்டு ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


விசாரணை அமைப்பு எதையும் அமைக்கப்படாத நிறுவனங்களில் அதன் உரிமையாளரே புகார் குறித்து விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிப்பதற்கு மசோதாவில் வகை செய்யப்பட்டு உள்ளது.


விசாரணை நிலுவையில் இருக்கும்போது, பாதிக்கப்பட்ட பெண் ஊழியரையோ அல்லது குற்றம் சாட்டப்பட்டவரையோ வேறு கிளைகளுக்கு பணி மாற்றம் செய்வதற்கு விசாரணை கமிட்டி உரிமையாளரிடம் சிபாரிசு செய்யலாம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விடுமுறையும் அளிக்க சிபாரிசு செய்யலாம்.


விசாரணை முடிந்ததும் அது தொடர்பான அறிக்கையை உரிமையாளருக்கோ அல்லது மாவட்ட அதிகாரிகளுக்கோ தாக்கல் செய்ய வேண்டும். அதே நேரத்தில், பொய்யான புகார் கூறப்பட்டால் சம்பந்தப்பட்ட பெண்களுக்கு எதிராக பணி விதிமுறைகளின்படியோ அல்லது வேறு வகையிலோ, உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் வகை செய்யப்பட்டு உள்ளது.


வீடுகளில் வேலை செய்யும் பெண்கள் இந்த சட்ட வரம்புக்குள் சேர்க்கப்படவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்ற சில வழக்குகளில் நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், இந்த சட்ட மசோதா கொண்டு வரப்பட்டு உள்ளது.

 nakkheeran.in