பெரியபட்டினத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் மீது, அவர்களது சகோதரி புகார்

31/08/2010 10:21

தன் குடும்பத்தார் மீது அதிகாரத்தை பயன்படுத்தி பொய் வழக்குகள் போட்டு வருவதாக, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் மீது, அவர்களது சகோதரி புகார் செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தைச் சேர்ந்தவர் சலிமா பீவி. இவருடன் பிறந்த ஏழு பேரில், அபுல் ஹசன் ஐ.ஏ.எஸ்., அதிகாரி; அமானுல்லா கான் ஐ.எப்.எஸ்., அதிகாரி. இவர்கள் சமீபத்தில் ஓய்வு பெற்றனர். இவர்களது அப்பா முத்துதம்பிக்கு, 60 ஏக்கருக்கு மேல் விளைநிலம் மற்றும் தோப்புகள் உள்ளன. இதை சகோதரர்கள் மட்டும் எடுத்துக் கொண்டு, சகோதரிகளுக்கு தர மறுத்தனர். தன் கணவருக்கு நடந்த அறுவை சிகிச்சையின் காரணமாக, சலிமா பீவி பொருளாதார ரீதியில் சிரமப்பட்டார். அவரது மகன் முகமது ஆசிக் என்பவர், அமானுல்லா கானிடம் சென்று, "என் அம்மாவுக்கு சேர வேண்டிய சொத்தைக் கொடுங்கள்' எனக் கேட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமானுல்லா கான், முகமது ஆசிக்கை விரட்டியடித்தார்.

இது குறித்து திருப்புல்லாணி போலீசில் புகார் செய்த போது, அவர்கள் அதை ஏற்க மறுத்து, ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளனர். இதற்கிடையில், சலிமா பீவியின் மகன் மற்றும் கணவர் மீது அமானுல்லா கான் புகார் கொடுத்தார். அதனடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இருவரும் ஜாமீனில் வந்த நிலையில், அறிமுகம் இல்லாத இஸ்மாயில் என்பவர் மூலம் மீண்டும் சலிமாவின் மகன் மீது போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டு, மீண்டும் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து போன் மூலம் மிரட்டல் வந்ததால் அச்சமடைந்த சலிமா பீவி, ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் ஹரிஹரனிடம் புகார் செய்தார்.