மது அருந்தி பயணம் செய்த பயணிகளால் ஏற்பட்ட விமான விபத்து

05/07/2011 17:40

மது அருந்தி விமானத்தில் பயணிக்கும் பயணிகள் சில தருணங்களில் விமான ஓட்டிகளிடம் வாக்குவாதம் செய்வதால் விபத்து ஏற்படுகிறது.

 

வான்கூவர் தீவில் கடந்த ஆண்டு ஒரு விமானம் இதுபோன்ற நிகழ்வால் விபத்துக்கு உள்ளானது. மது அருந்திய பயணிகள் விமான ஓட்டியிடம் வாக்குவாதம் செய்ததால் வான்கூவரில் விமானம் நொறுங்கி 4 பேர் பலியானார்கள். இந்த விவரம் சமீபத்தில் வெளியான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

2010ஆம் ஆண்டு பிரிட்டிஷ் கொலம்பியாவில் மே மாதம் 29ஆம் திகதி டோபினோ பகுதியில் செஸ்னா 185 எப் விமானம் விபத்துக்கு உள்ளானது. இதில் அல்டோ ரிவர் ஏர் சர்வீஸ் விமான ஓட்டி டாமன் யோர்க் மற்றும் பயணிகள் காதரினா இங்கிலீஷ், எட்வர்டு சாம் மற்றும் சமந்தா மாட்ரஸ்டோபர் பலியானார்கள்.

கனடா போக்குவரத்து பாதுகாப்பு போர்டு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் எந்திரக் கோளாறு அல்லது வானிலை காரணமாக விமானம் விபத்துக்கு உள்ளாகவில்லை. விமான ஓட்டி இயல்பான கட்டுப்பாட்டுடன் விமானத்தை இயக்க முடியவில்லை.

 

விபத்தில் பலியான 3 பயணிகளும் மது அருந்தி இருந்தது தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் விபத்திற்கு உள்ளானதற்கு முன்பாக அவர்கள் விமான ஓட்டுநரிடம் கடுமையான வாக்குவாதத்திலும் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது.

 

விபத்தில் விமான ஓட்டியின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டதுடன் வலது மணிக்கட்டு எலும்பு நொறுங்கி கிடந்தது. பயணிகளுக்கு குதிகால் எலும்புகள் உடைந்து இருந்தன என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

newsonews.com