மத்திய மந்திரிசபை மாற்றம்

29/06/2011 17:35

மந்திரி சபையை மாற்றி அமைப்பது குறித்து பிரதமர் மன்மோகன்சிங் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியை பலமுறை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அமைச்சரவையில் புதிதாக யாரை சேர்க்கலாம் என்பது குறித்து சோனியாவுடன் அவர் விவாதித்தார்.

 
பாராளுமன்ற மழைக்கால கூட்ட தொடர் ஆகஸ்டு 1-ந் தேதி கூடுகிறது. அதற்குள் மந்திரி சபையை மாற்றி அமைக்க பிரதமர் திட்டமிட்டு உள்ளார். அப்போது தான் புதிதாக பொறுப்பேற்கும் அமைச்சர்கள் தங்கள் துறை பற்றி தெரிந்து கொண்டு பாராளுமன்ற கூட்டத்தை எதிர் கொள்ள முடியும் என்று அவர் கருதுவதாக கூறப்படுகிறது.
 
ஜூலை முதல் வாரத்தில் மந்திரி சபை மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஆனால் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் ஜூலை 2-ந் தேதி ஆந்திராவில் சுற்றுப் பயணம் செய்கிறார். 8-ந் தேதி தான் அவர் டெல்லி திரும்புகிறார். இதனால் மந்திரி சபை மாற்றம் ஜூலை 2-வது வாரத்துக்கு தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.
 
அனேகமாக ஜூலை 9-ந் தேதி அல்லது 10-ந் தேதி மந்திரிசபை மாற்றம் இருக்கும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. புதிய மந்திரி சபையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர் பார்ப்பு உள்ளது. மேலும் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்கள் மீண்டும் மந்திரி சபையில் சேர்க்கப்பட உள்ளனர்.
 
அந்த வகையில் முன்னாள் உள்துறை மந்திரி சிவராஜ் பட்டீல் மீண்டும் மந்திரி சபையில் சேர்க்கப்படுகிறார். கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அவர் பதவி விலகினார். தற்போது உள்துறை மந்திரியாக இருக்கும் ப.சிதம்பரம் பாதுகாப்பு மந்திரி ஆகலாம் என்று தெரிகிறது.
 
வெளியுறவு துறை மந்திரியாக இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா நீக்கப்பட்டு ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணிக்கு அந்த இலாகா ஒதுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.   இதே போல் எம்.எஸ்.கில் பதவி பறிக்கப்படுகிறது. தி.மு.க.வைச் சேர்ந்த ஜவுளித்துறை மந்திரி தயாநிதி மாறன் பதவியும் பறிபோகும் என்று கூறப்படுகிறது.
 
பி.கே.ஹாண்டிக், காந்திலால் பூரியா, சி.பி.ஜோஷி, முரளி தியோரா ஆகியோர் பதவிகளும் பறிக்கப்பட்டு அவர்களுக்கு கட்சி பணி வழங்கப்படுகிறது.   உத்தரபிரதேச மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. அந்த மாநிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நடிகர் ராஜ்பாப்பர் எம்.பி. மந்திரியாகிறார்.
 
மேலும் ராகுல்காந்திக்கு நெருக்கமான இணை அமைச்சர்கள் சச்சின் பைலட், ஜோதி ராதித்யா சிந்தியா, ஆர்.பி.சிங் ஆகியோருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்படும் என்று தெரிகிறது.