மருத்துவம், என்ஜினீயரிங் படிப்பு: பொது நுழைவு தேர்வு திட்டத்துக்கு மத்திய சுகாதார துறை எதிர்ப்பு

15/11/2010 21:29

 

மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்காக, பொது நுழைவு தேர்வு நடத்தும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய சுகாதாரத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
 

மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புக்கு நாடு முழுவதும் பொதுவான நுழைவு தேர்வு நடத்துவது என்று, மத்திய மனித வள மேம்பாட்டு துறை திட்டமிட்டு உள்ளது.


மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன், ஏ.கே.பட்நாயக் ஆகியோரைக் கொண்ட பெஞ்ச்' முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்த வழக்கு தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை சார்பில், சுகாதார பணிகள் தலைமை இயக்குனர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு (பிரமாண பத்திரம்) தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது


"மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு பொதுவான நுழைவுத்தேர்வு நடத்தும் திட்டம் குறித்து கவனத்துடன் பரிசீலித்து இந்த மனு தாக்கல் செய்யப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டம் ஏற்புடையது அல்ல.


மாணவர்கள் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய சுமை இந்த திட்டத்தின் மூலம் தவிர்க்கப்படும் என்றாலும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு நாடு தழுவிய விவாதம் நடத்தி இறுதி முடிவு எடுக்கப்பட வேண்டும்.


மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்தும்போது சில நடைமுறை சிக்கல்கள் ஏற்படும். மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் ஆகிய இரு பிரிவுகளிலும் நுழைவு தேர்வு எழுதும் தகுதி படைத்த மாணவர்கள், இரண்டு பட்டியலிலும் தேர்வு பெற்றால் அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்யும்போது சிக்கல் ஏற்படும்''. இவ்வாறு அந்த பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளது.

nakkheeran.in