மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டவர்களில் 3 பேர் கொலை, 4 பேரை விடுவிக்க 2 நாள் கெடு

28/09/2010 12:21

தங்களால் கடத்திச் செல்லப்பட்ட காவலர்கள் 4 பேரை விடுவிக்க வேண்டுமானால் தங்களது கோரிக்கைகளை 48 மணி நேரத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று சட்டீஸ்கர் அரசுக்கு மாவோயிஸ்டுகள் கெடு விதித்துள்ளனர்.

கடந்த 19 ஆம் தேதியிலிருந்து 7 காவலர்களை காணவில்லை என்று கூறப்படுகிறது.சட்டீஸ்கர் - ஆந்திர எல்லைப் பகுதியில் உள்ள போபால்பட்டினம் என்ற இடத்திலிருந்து மாவோயிஸ்டுகள் இவர்களை கடத்திச் சென்றனர்.

கடத்திச் செல்லப்பட்ட காவலர்களில் 3 பேரது சடலங்கள், இரண்டு நாட்களுக்குப் பின்னர் மாவோயிஸ்டுகளின் கொள்கைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களோடு கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் மீதமுள்ள 4 காவலர்களின் நிலை குறித்த தகவல் ஏதும் தெரிய வராத நிலையில், அவர்களை விடுவிக்க வேண்டுமானால் 48 மணி நேரத்திற்குள் தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மாவோயிஸ்டுகள் கெடு விதித்துள்ளதாக ஆங்கில செய்தி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து சட்டீஸ்கர் முதலமைச்சர் ராமன் சிங், காவல்துறை உயரதிகாரிகளுடன் தொடர்புகொண்டு ஆலோசித்து வருவதோடு, ஆந்திர ஆளுநர் நரசிம்மனுடனும் இது குறித்து விவாதித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், மாவோயிஸ்டுகளின் பிடியிலிருந்து காவலர்களை மீட்பதற்காக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.