முதல்வராக நீடிக்க எடியூரப்பா ரூ.500 கோடி கொடுத்தார் !

06/12/2010 09:45

முதல்வராக நீடிப்பதற்காக எடியூரப்பா பாரதீய ஜனதா தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கு ரூ.500 கோடி கொடுத்ததாக கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

கர்நாடக காங்கிரஸ் தலைவர்களான கர்நாடக மேல்-சபை முன்னாள் தலைவர்கள் உக்ரப்பா, பி.எல்.சங்கர் மற்றும் நாடகவுடா எம்.எல்.ஏ. ஆகியோர்  சனிக்கிழமை லோக் அயுக்தா அலுவலகத்துக்கு சென்று நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவிடம் புகார் மனுவை கொடுத்தனர். பின்னர் உக்ரப்பா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் நில முறைகேடு, சுரங்க முறைகேடு, முத்திரை மற்றும் பதிவுத்துறை, வனத்துறை ஆகியவற்றில் முறைகேடு தொடர்பாக முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது லோக் அயுக்தாவிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். நாங்கள் கொடுத்து உள்ள புகார் மனு 388 பக்கங்களை கொண்டது ஆகும். ஆயிரக்கணக்கான ஏக்கர் முறைகேடு நடந்து உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி நடந்து உள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும். முதல்வர் எடியூரப்பாவை பாதுகாப்பதற்காகவே அமைச்சர் கட்டா சுப்பிரமணியநாயுடு ராஜினாமா செய்து உள்ளார்.

முதல்வர் எடியூரப்பா பாஜகவின் தேசிய தலைவர்களுக்கும், தேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து தனது பதவியை காப்பாற்றிக் கொண்டு உள்ளார். எனக்கு கிடைத்த தகவலின் படி ரூ.500 கோடிக்கும் அதிகமாக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுக்கும் அவர் கொடுத்து உள்ளார்.

இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி அதில் பணம் கொடுத்தது இல்லை என்று எடியூரப்பா நிரூபித்தால், அவர் சொல்லும் பேச்சை நான் கேட்க தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு உக்ரப்பா கூறினார்.
inneram.com