முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை 5%ஆக உயர்த்த வேண்டும்: முஸ்லிம் லீக்

12/12/2010 22:22

 

முஸ்லிம்களுக்கு தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தித் தரவேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கோரியுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநில மாநாடு சென்னை தாம்பரத்தில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, "நானிலம் போற்றும் நல்லிணக்க நாயகர்" விருதும் வழங்கப்பட்பட்டது.

விழாவில் கலந்து கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவரும், மத்திய ரெயில்வே இணை அமைச்சருமான இ.அகமது `இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இலக்கு 2020' என்ற நூலை வெளியிட்டு ஆற்றிய சிறப்புரையில், ``கலைஞர் கருணாநிதி ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ, குறிப்பிட்ட சமுதாயத்துக்கோ மாத்திரம் தலைவர் அல்ல. அவர், முஸ்லிம் நண்பராகவும், ஒற்றுமை, ஒருமைப்பாட்டை கட்டிக் காக்கும் தலைவராகவும் இருப்பதால் மட்டுமே முதல்வராக இருக்கவில்லை. அவருக்கு காயிதே மில்லத்தின் பரிபூரண ஆசி இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னிலையுரையாற்றிய துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், "முஸ்லிம்களுக்கும் எனக்கும் தொப்புள் கொடி உறவு உள்ளது என்று முதல்வர் கருணாநிதி கூறுவார். அந்த உறவுக்கு அடையாளமாக இந்த விருதினை வழங்கி உள்ளார்கள். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க.வினரும், கலைஞரும் சிறுபான்மையினருக்காக தொடர்ந்து குரல் கொடுப்பார்கள்'' என்று கூறினார்.

"நல்லிணக்கம் பரப்பக்கூடிய தலைவராக விளங்குவதாலேயே முதல்வர் கருணாநிதிக்கு இந்த விருதை கொடுக்க நாங்கள் முடிவு செய்தோம்" என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழகத் தலைவர் காதர் மொய்தீன் எம்.பி. கூறினார்.

முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமாக இருக்கும் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்தித் தரவேண்டும்; சமச்சீர் கல்வித்திட்டத்தில் உருது மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள், அதனை கட்டாயமாகப் பயிலவும், தேர்வு எழுதவும் அரசுக்கு வழிகாட்ட வேண்டும், சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும்; வெளிநாடு வாழ் தமிழர் நலனுக்கு தனி துறையை உருவாக்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் சிறைக்கைதிகளாக உள்ளவர்களை, விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், மைதீன்கான், தா.மோ.அன்பரசன், அப்துல் ரகுமான் எம்.பி, சட்டமன்ற உறுப்பினர் அப்துல் பாசித், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச்செயலாளர் முகம்மது அபுபக்கர், செயலாளர் காயல் மகபூப், பொருளாளர் வடக்குக்கோட்டையார், கேரள மாநிலத் தலைவர் ஹைதர் அலி சிகாப்தங்கள், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துர் ரகுமான் உள்ளிட்ட பலர் பேசினார்கள். முன்னதாக, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது.

inneram.com