முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு பரிசீலிக்கப்படும் - கருணாநிதி

31/01/2011 19:47

 

""முஸ்லிம்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்,'' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை முதன்மைச் செயலர் அலாவுதீன் மகள் முஸ்பிரா மைமூனுக்கும், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் இதயதுல்லா மகன் ரஷீத் அரபாத் திருமணம் சென்னையில் நேற்று நடந்தது.


திருமண விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: இதயதுல்லாவின் பேச்சை கேட்ட போது, என்னை அழைத்தது மணவிழாவிற்கா அல்லது மாநாட்டிற்கா என புரியவில்லை. அவரது கோரிக்கைகள் கைகழுவப்படாமல் நிச்சயம் பரிசீலிக்கப்படும். அதற்கான மகிழ்ச்சியை அவர்கள் தெரிவிக்கும் நாள் விரைவிலே வரும்.


வாசன் தந்தை மூப்பனார், மறைந்தும் மறையாத மாணிக்கமாக இன்றளவும் நம்மால் போற்றப்படுகின்ற அரும்பெரும் தலைவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு, எனக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்டிருந்த நட்பு சாதாரணமானதல்ல. அந்த நட்பை நாங்கள் என்றைக்கும் மறந்தவர்கள் அல்ல. வேதவாக்கு என்பார்களே, அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இருந்தாலும், அவரது வாக்கு பலிக்கும் என்ற நம்பிக்கையோடு அவர் தந்த வாக்கை ஏற்றுக் கொண்டவன்.


அந்த வாக்கு தான் குமரியில் வள்ளுவருக்கு விழா எடுத்து, 133 அடி உயரமுள்ள சிலையை அமைத்த போது, அந்த விழாவிற்கு வந்திருந்த மூப்பனார் தனது கையில் மறைத்து வைத்திருந்த ஒரு புத்தகத்தை எனக்குப் பரிசாகத் தந்தார். அதைப் பிரித்துப் பார்த்தால், "நீ வெல்வாய்' என, அந்தப் புத்தகத்திற்கு தலைப்பு ஆங்கிலத்தில் இருந்தது. அப்போதெல்லாம் அரசியல் ரீதியாக அவருக்கும், எனக்கும் மாறுபாடு உண்டு. அந்த நேரத்தில் ஒருவர், "நீ வெல்வாய்' என்ற புத்தகத்தை என்னிடத்தில் கொடுத்தார் என்றால் அவரது பரந்த உள்ளத்தை எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்.


முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இதயதுல்லாவின் கோரிக்கைகளை நான் வெளிப்படையாகச் சொல்வதற்கு முன் எனக்கென்று ஒரு அரசு இருக்கிறது. அந்த அரசில் சில அமைச்சர்கள் இருக்கிறோம். எல்லாரும் கலந்து பேசி அதற்கு பின் தான் இதை வெளியிட முடியும். அதுவரை பொறுமையாக இருங்கள். இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேசினார்.

தினமலர் 31-01-2011