முஸ்லிம்கள் தேசிய கட்சியில் இணைய வேண்டும்: கார்த்தி சிதம்பரம்

02/09/2010 10:08

ஆட்சி அதிகாரம் கைக்கு வர வேண்டுமானால் முஸ்லிம்கள் தேசிய கட்சியில் இணைய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வேண்டுகோள் விடுத்தார்.

 

சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

 

உலகம் முழுவதும் இஸ்லாம் குறித்து தவறான எண்ணம் பரவியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா போன்ற மேற்கத்திய நாடுகளில் இந்த எண்ணம் அதிகமாக உள்ளது. ÷ இஸ்லாமியர்கள் குறித்த தவறான கருத்துகள் அகற்றப்பட வேண்டும். இங்குள்ள இஸ்லாமியத் தலைவர்கள் தங்களது நிலையைத் தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். ÷அதற்கான மேடை கிடைக்க வேண்டுமானால் அவர்கள் காங்கிரஸ் போன்ற தேசிய கட்சியில் இணைய வேண்டும்.

 

முஸ்லிம்களுக்கென்று உள்ள கட்சிகளில் இருந்து செயல்பட்டால் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. தேசிய கட்சியில் இணையும்போது மட்டுமே ஆட்சி அதிகாரமும் சாத்தியமாகும். ÷பாஜகவுடன் கூட்டணி அமைக்காத கட்சி காங்கிரஸ் மட்டுமே. திராவிடக் கட்சிகள் தேவைப்பட்டால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பார்கள். இதை முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் கார்த்தி சிதம்பரம்.

 

மக்களவை உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, தமிழக அரசின் தலைமை காஜி சலாவூதீன் முஹமது அயூப், இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத் தலைவர் அபுபக்கர், முன்னாள் எம்.பி. அப்துல் காதர், சென்னை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் கராத்தே தியாகராஜன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கே.சிரஞ்சீவி, எம்.எல்.ஏ.க்கள் சுந்தரம், ராஜ்குமார் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Dinamani