ராமநாதபுரம் மாவட்டத்தில் அனல் மின் நிலையம் அமைக்க அரசு முடிவு; கலெக்டர் ஹரிகரன் தகவல்

04/11/2010 15:39

ராமநாதபுரம் மாவட்டத்தில் அனல் மின் நிலையம் மற்றும் பெட்ரோல், ரசாயன தொழில் தொடங்க அரசு முடி வெடுத்துள்ளதாக கலெக்டர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.
 
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஹரிகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
 
வறட்சி மாவட்டமாக கருத்தப்பட்டு வந்த ராமநாதபுரம் தற்போது தொழில் நகரமாக மாறி வருகிறது. தற்போது திருஉத்திரகோசமங்கை, உப்பூர் ஆகிய பகுதிகளில் நிலத்திற்கு அடியில் 15 மீட்டர் ஆழத்தில் நிலக்கரி படிவம் அதிகம் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.
 
எனவே அந்த கனிம வளத்தை பயன்படுத்தி மேற் கண்ட இரண்டு ஊர்களிலும் அனல் மின் நிலையம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக திரு உத்திரகோசமங்கை, உப்பூர் ஆகிய பகுதிகளில் தலா 200 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த உள்ளது. இதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
 
 
இதேபோல் தொண்டி நகரின் தென்புறம் இருந்து ராமநாதபுரம் வரையிலான பகுதியில் பெட்ரோல் மற்றும் ராசயன தொழில் தொடங்க மத்திய அரசு முடிவு செய்து ஆய்வு பணிகளையும் நடத்தி வருகிறது.
 
இதுதொடர்பாக நிபுணர்கள் பலர் வந்து ஆய்வு நடத்தி உள்ளார்கள். அந்த பகுதியில் 50 ஆயிரம் ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்த உள்ளது. இதற்கான பணிகளிலும் மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

மாலைமலர்.காம்