ராமநாதபுரம் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் ஏழை முஸ்லிம் பெண்களுக்கு 5 லட்சம் நிதியுதவி

09/09/2010 12:38

ராமநாதபுரம் மாவட்ட பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை சார்பில் செயல்பட்டு வரும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில் ஏழை முஸ்லிம்  பெண்களுக்கு 5 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத் திட்டங்களுக்கு நிதியுதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட முஸ்லிம் மகளிர் உதவும் சங்கச் செயலாளர் எஸ்.முகம்மது ஜலீல் தலைமை வகித்தார்.

சங்க இணைச் செயலாளர்கள் டாக்டர் பாத்திமா சின்னத்துரை, குர்ரத் ஜமீலா, உறுப்பினர்கள் மரியம் ஹபீப், டாக்டர் சபீக்கா சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் ஹமீது அப்துல் காதர், செய்யது அம்மாள் அறக்கட்டளை தலைவர் டாக்டர் பாபு அப்துல்லா, செயலாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஆ. ரவிச்சந்திர ராமவன்னி, டாக்டர் மன்சூர், டாக்டர் நூருல்ஹவ்வா, சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொதுமேலாளர் சேக் தாவூத், கம்பன் கழகத் தலைவர் எம்.ஏ.சுந்தர்ராஜன், வர்த்தகர்கள் சங்கத் தலைவர் பா. ஜெகதீசன், செயலாளர்.

குப்தா. கோவிந்தராஜன், ஜவுளி ரெடிமேட் சங்கத் தலைவர் வைகிங். எம்.எஸ். கருணாநிதி ஆகியோர் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில், ஏழை முஸ்லிம் பெண்களுக்கு கல்வி, திருமணம், மருத்துவம் ஆகியவற்றுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. விதவைப் பெண்கள் சுய தொழில் செய்து முன்னேறவும் நிதியுதவி வழங்கியது உட்பட 5 லட்சம் மதிப்பிலான தொகையை சங்க நிர்வாகிகள் வழங்கிப் பேசினர்.

 

விழாவில், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலர் எம். கணேசன், மகளிர் திட்ட அலுவலர் ரா. ரெத்தினசாமி ஆகியோர் உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.  கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் ஹமீது அப்துல் காதர்  2 லட்சம், சேது பொறியியல் கல்லூரித் தாளாளர் எஸ். முகம்மது ஜலீல் ஒரு லட்சம், செய்யது அம்மாள் அறக்கட்டளை சார்பில் அதன் நிர்வாகி செல்லத்துரை அப்துல்லா ஒரு லட்சம் வழங்குவதாகவும் அறிவித்தனர்.

விழாவின் நிறைவாக இப்தார் விருந்து நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Dinamani