வாரணாசியில் குண்டுவெடிப்பு: 20 பேர் காயம்

07/12/2010 10:41

இந்தியாவின் புகழ்பெற்ற கோயில் நகரங்களின் ஒன்றான வாரணாசியில் இன்று மாலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

 

 

கங்கை ஆற்றின் கரையோரத்தில் தினமும் மாலையில் தீப ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும். இன்று அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக "ஷீட்லா காட்" பகுதியில் சுமார் 5000 பக்தர்கள் திரண்டிருந்தனர்.

 

 

ஆரத்தி நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், மாலை 6.30 மணியளவில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதனால் பக்தர்களிடையே பதற்றம் நிலவியது.

 

 

இச்சம்பவத்தில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதில் சிலர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. அவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 

 

குறைந்த சக்தியுடைய குண்டுகள் வெடித்துள்ளதாகவும், குண்டுவெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்து போலீஸார் ஆராய்ந்து வருவதாகவும் வாரணாசி காவல்துறை அதிகாரி ஆர்.பி. சிங் கூறியுள்ளார்.

 

 

இதையடுத்து, உத்தரப்பிரதேசம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

dinamani.com