ஸ்பெக்ட்ரம் விவகாரம்: சாட்சிகள் 7 பேருக்கு கூடுதல் பாதுகாப்பு

15/04/2011 19:09

 

ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் தொடர்புடைய சாதிக்பாட்சா சென்னையில் கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து ஸ்பெக்ட்ரம், விவகாரத்தில் தொடர்புடைய சாட்சிகள், குற்றவாளிகளுக்கு போதுமான பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு சி.பி.ஐ. கோரிக்கை விடுத்தது. 
 
மத்திய உள்துறைக்கு இது தொடர்பாக சி.பி.ஐ. சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில், ஸ்பெக்ட்ரம் விவகாரம் மிகவும் முக்கியமானது. சமுதாயத்தில் சக்தி படைத்த பலர் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். இதனால் சாட்சிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே 7 முக்கிய சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
 
ஸ்பெக்ட்ரம் வழக்கில் 125 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 7 பேர் மிக, மிக முக்கியமான சாட்சிகள். அந்த 7 பேருக்கும் கூடுதல் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று சி.பி.ஐ. தரப்பில் வற்புறுத்தப்பட்டது.  சி.பி.ஐ. கோரிக்கையை ஏற்று 7 பேருக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்க மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி 7 பேருக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த 7 பேர் விவரம் வருமாறு:-
 
1. ஆசீர்வாதம் ஆச்சாரி (ராசாவின் முன்னாள் கூடுதல் தனி உதவியாளர்).
 
 2. ஆர்.பி. அகர்வால் (வயர்லஸ் அட்வைசர்).
 
3. அசோக்வத்வா (ஆம் பிட் ஹோல்டிங்ஸ் நிறுவன அதிகாரி).
 
4. ஆசீஷ் கர்யேகர் (ரிலையன்ஸ் பொது மேலாளர்).
 
5. ஏ.கே. ஸ்ரீவஸ்தவா (தொலை தொடர்புத்துறை முன்னாள் துணை இயக்குனர்).
 
6. ராம்ஜிசிங்குசவா (வயர்லஸ் இணை அட்வைசர்).
 
7. தியோட்டா பண்டிட் (ரிலையன்ஸ் நிறுவன முன்னாள் செயலாளர்).

மாலைமலர்