1,670 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பின காலியிடங்களை நிரப்ப வரும் 29-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.

27/09/2010 16:28

தமிழகத்தில் 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து பெறப்பட்ட 17 எம்.பி.பி.எஸ். இடங்கள் என மொத்தம் 1,670 எம்.பி.பி.எஸ். இடங்களும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன.

சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி எம்.பி.பி.எஸ். காலியிடங்களை நிரப்ப இறுதிக் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்பட 17  அரசு மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. கலந்தாய்வில் அனுமதிக் கடிதம் பெற்ற அனைத்து மாணவர்களும் வரும் 28-ம் தேதி கல்லூரியில் சேர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதே போன்று சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரப்பப்பட்டு விட்டன. தொடர்ந்து சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். காலியிடங்களை நிரப்ப வரும் 29-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி, வரும் 30-ம் தேதிக்குள் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும்.