10 ஆயிரம் காவலர்கள் புதிதாக நியமனம்:கலைஞர்

20/11/2010 19:09

 

தமிழ் நாடு காவல் துறையில் 10 ஆயிரம் காவலர்கள் புதிதாக நியமனம் செய்ய முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.


இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

‘’தமிழகத்தில் காவல் துறை பணிகளை மேம்படுத்தும் நோக்கில் காவல் துறையில் காலியாக இருந்த பணியிடங்களை நிரப்பிட உறுதிபூண்டு 2006இல் இந்த அரசு பொறுப்பேற்றபின் கடந்த நான்காண்டுகளில் 15 ஆயிரத்து 84 காவலர்களும், 950 உதவி ஆய்வாளர்களும் தேர்வு செய்யப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

 

அதனைத் தொடர்ந்து, தற்போது காவல் துறையில் 1095 உதவி ஆய்வாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், 8 ஆயிரத்து 944 காவலர்களும், 486 சிறைக் காவலர்களும், தீயணைப்புத் துறையில் 630 தீயணைப்பு வீரர்களும் என மொத்தம் 10 ஆயிரத்து 60 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் 293 அருந்ததியர் வகுப்பினரும், 3.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதால் 263 இஸ்லாமியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 2,069 ஆதிதிராவிடர்களும், 94 பழங்குடியினத்தவரும், 3,343 பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும், 2,681 மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


 சீருடைப் பணியாளர் தேர்வில் கலந்து கொண்ட மகளிரில் 2,644 பேர் பெண் காவலர்களாகவும், 29 பேர் பெண் சிறைக் காவலர்களாகவும் என மொத்தம் 2,673 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


காவல் துறையில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள 10 ஆயிரத்து 60 காவலர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மற்றும் நடத்தைச் சரிபார்ப்புப் பணிகள் ஆகியவற்றை விரைவாக மேற்கொண்டு பணி நியமனங்கள் வழங்கிட முதலமைச்சர் கருணாநிதி  ஆணையிட்டுள்ளார்’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

nakkheeran.in