15-வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது:90 கோடி நட்டம்

03/12/2010 12:36

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரிக்க பாராளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் 15-வது நாளாக நேற்றும் பாராளுமன்றம் முடங்கியது. இதனால், ரூ.90 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.


2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேட்டால் மத்திய அரசுக்கு ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி தெரிவித்தார்.

இதையடுத்து, மத்திய தொலைத் தொடர்பு மந்திரி பதவியை ஆ.ராசா ராஜினாமா செய்தார். எனினும், இந்த விவகாரம் குறித்து பாராளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனால், கடந்த மாதம் (நவம்பர்) 10-ந் தேதியில் இருந்து ஒரு நாள் கூட பாராளுமன்றம் நடைபெறவில்லை. நேற்று வரை 15 நாட்களுக்கு பாராளுமன்ற அலுவல்கள் நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், நேற்றும் அமளி நீடித்ததால் பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.

நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும் கேள்வி நேரம் தொடங்குவதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார். ஆனால், பா.ஜனதா, அ.தி.மு.க., சிவசேனா, சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுந்து நின்று, `பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை தேவை' என கோஷமிட்டனர்.

மேலும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து புதுப் புது தகவல்கள் வெளியாயின பத்திரிகைகளின் பிரதிகளை கைகளில் வைத்துக் கொண்டு அமளியில் ஈடுபட்டனர்.

 

வழக்கமாக, எதிர்க்கட்சியினர் கோஷமிட்டால் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா விவகாரத்தை காங்கிரஸ் கட்சியினர் எழுப்பி பதில் கோஷமிடுவது வழக்கம்.

ஆனால், நேற்று அப்படி எதுவும் செய்யாமல் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் அமைதியாக இருக்கையில் இருந்தனர். அவையின் மையப்பகுதிக்கு வந்து எதிர்க்கட்சியினர் கோஷமிட்டதால் நண்பகல் 12 மணி வரை பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதாக மீரா குமார் அறிவித்தார்.

 

 


பின்னர் 12 மணிக்கு பாராளுமன்றம் கூடியதும் இந்த நிதியாண்டுக்கான செலவினம் தொடர்பான தொகையை அனுமதிப்பது குறித்த நிதி மசோதாக்களை நிதி மந்திரி பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். அதன்படி, ரூ.45 ஆயிரம் கோடிக்கான பல்வேறு நிதி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இது போல, ரெயில்வே துறைக்கு தேவையான நிதி தொடர்பான மசோதாக்களை ரெயில்வே மந்திரி மம்தா பானர்ஜி தாக்கல் செய்தார்.


அதைத் தொடர்ந்து ரெயில்வே துறைக்கு தேவையான ரூ.2156 கோடி தொகையை அனுமதிக்கும் மசோதாக்கள் விவாதமின்றி நிறைவேற்றப்பட்டன. அதே நேரத்தில், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கோஷம் தொடர்ந்து கொண்டே இருந்தது.

அதற்கு இடையில் தான், இந்த மசோதாக்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டன. அனேகமாக, பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்து நிதி மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டு விட்டன.


மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதும் நாள் முழுவதும் அவையை ஒத்திவைப்பதாக சபாநாயகர் மீராகுமார் அறிவித்தார். அமளி நடந்த போது பாராளுமன்றத்தில் சோனியா இருந்தார்.


எனவே, மேல்-சபை ஒப்புதலுக்காக அவை அனைத்தும் அனுப்பி வைக்கப்பட்டன. மேல்-சபையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அனைத்து நிதி மசோதாக்களும் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, பாராளுமன்றத்தில் ரெயில்வே மசோதா நிறைவேற ஒத்துழைத்ததால் பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்ட பிறகு, எதிர்க்கட்சி தலைவர்களான அத்வானி, சுஷ்மா சுவராஜ், சரத்யாதவ், லாலுபிரசாத் ஆகியோருக்கு மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார்.


பாராளுமன்றத்தை போலவே, டெல்லி மேல்-சபையிலும் கடும் அமளி நீடித்தது. எனவே, முதலில் நண்பகல் 12 மணி வரையிலும் பின்னர் நாள் முழுவதும் மேல்-சபை ஒத்தி வைக்கப்பட்டது. இதனால், தொடர்ந்து 15-வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது.

எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டபோது, பிரதமர் மன்மோகன் சிங் மேல்-சபையில் அமைதியாக இருந்தார். அமளிக்கு இடையே நிதி மசோதாக்களை நிதித்துறை இணை மந்திரி நமோ நாராயண் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.


பாராளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் கடந்த மாதம் 8-ந் தேதி அன்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா உரையாற்றினார். அதற்கு மறுநாள் குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கியது. அன்றைய தினம் மட்டுமே அலுவல்கள் நடந்தன. அதன் பிறகு 10-ந் தேதியில் இருந்தே ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் விவகாரம் புயலை கிளப்பி வருகிறது.


அதனால், 15 நாட்களாக பாராளுமன்ற அலுவல்கள் நடைபெறவில்லை. பாராளுமன்றம் நடைபெறும் நாட்களில் எம்.பி.க்கள், இரு சபைகளின் சபநாயகர்கள், துணை சபாநாயகர்கள் ஆகியோருக்கு அலவன்சுகள் உள்ளிட்டவை அளிக்கப்படுகின்றன. பாராளுமன்ற நடவடிக்கைகளுக்காகவே, இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.347 கோடியே 65 லட்சத்தை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது தவிர, பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சகமும் தனியாக நிதி ஒதுக்குகிறது.


அதன்படி, பாராளுமன்றம் இயங்கும் நாட்களில் தினந்தோறும் சராசரியாக ரூ.6 கோடியே 35 லட்சத்தை மத்திய அரசு செலவிடுகிறது. தற்போது, 15 நாட்களாக பாராளுமன்றம் முடங்கியுள்ளதால் ரூ.95 கோடியே 25 லட்சம் வீணாகி விட்டது.

 

 

 


nakkheeran.in