2-ஜி அலைக்கற்றை முறைகேடு: 5 நிறுவன உயரதிகாரிகளை கைது செய்ய சிபிஐ மனு

16/04/2011 18:25

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ள தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் 5 உயர் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று சிபிஐ தரப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

 

ஸ்வான் டெலிகாம் இயக்குநர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் (தமிழகம்) லிமிடெட் நிறுவன நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தைச் சேர்ந்த கெüதம் தோஷி, சுரேந்திர பிபாரா, ஹரி நாயர் ஆகியோரின் பெயர்கள் குற்றப் பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.

 

தாங்கள் கைது செய்யப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு இவர்கள் தில்லி நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தனர். இது தொடர்பான பதிலை அளிப்பதற்கு அவகாசம் அளித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி. சைனி, இது தொடர்பான விசாரணையை ஏப்ரல் 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 

இவர்களுக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது என சிபிஐ தரப்பில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது:

 

வழக்கு விசாரணையின்போது இவர்கள் அனைவரும் தலைமறைவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இந்த வழக்கின் முக்கிய சாட்சியங்களை இவர்கள் கலைக்கக் கூடும். குற்றப் பத்திரிகையில் சாட்சிகளாக இடம்பெற்றுள்ளவர்கள் இத்தகைய உயரதிகாரிகளின் கீழ் பணியாற்றுபவர்களாக இருப்பின் அவர்களை தங்களது அதிகாரத்தின் மூலம் இவர்கள் மிரட்டக் கூடும். கீழ்நிலையில் உள்ளவர்கள் இவர்களது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். சாட்சிகளைக் கலைப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம் உள்ளன என்று கூறப்பட்டிருந்தது.

 

இந்த வழக்கு விசாரணையைத் தடுக்கும் நோக்கில் உயரதிகாரிகள் அனைவரும் தலைமறைவாவதற்கு வாய்ப்பு உள்ளது என்று சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.யு. லலித் குறிப்பிட்டார்.

 

யுனிடெக் நிறுவன குழும நிறுவனங்களில் எதுவுமே தொலைத் தொடர்புத் துறையில் தடம் பதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை. இக்குழும நிறுவனம் முழுக்க முழுக்க ரியல் எஸ்டேட் துறையில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. தொலைத் தொடர்பு லைசென்ஸýக்கு விண்ணப்பிக்கும் வரை இக்குழும நிறுவனங்கள் அனைத்துமே ரியல் எஸ்டேட் தொழிலில் மட்டுமே ஈடுபட்டன என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

 

இதேபோல ரிலையன்ஸ் டெலிகாம் செயல் இயக்குநர் கெüதம் தோஷி, ரிலையன்ஸ் ஏடிஏ குழுமத்தின் மூலம் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தைத் தோற்றுவிக்கலாம் என்ற யோசனையை அளித்தவரே இவர்தான் என்று சிபிஐ வழக்கறிஞர் குறிப்பிட்டார்.

 

ஸ்வான் நிறுவன ஆவணங்கள் பலவற்றில் ரிலையன்ஸ் நிறுவன அதிகாரிகள் மோசடி செய்துள்ளனர். இதேபோன்ற குற்றச்சாட்டை டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் வினோத் கோயங்கா மீதும் சிபிஐ சுமத்தியது.

 

முன்னர் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்பட்டவர்கள் இப்போது குற்றவாளிகள் என குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இவர்களைக் கைது செய்த பிறகே ஜாமீன் வழங்குவது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கலாம் என்று வழக்கறிஞர் லலித் வாதாடினார்.

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீன் கோருவதற்கு சட்டத்தில் இடமுண்டு என்று வினோத் கோயங்கா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி குறிப்பிட்டார்.

 

விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்படவில்லையெனில் அவரைக் கைது செய்ய வேண்டும் என கோர வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் பெறும் உரிமையை இந்த நீதிமன்றம் மறுக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.

 

மூன்று மணி நேரம் இருதரப்பு வாதத்தைக் கேட்ட சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி, ஜாமீன் வழங்குவது தொடர்பான தீர்ப்பு ஏப்ரல் 20-ம் தேதி அளிக்கப்படும் என்றார்.

 

இதன்படி ஏற்கெனவே இந்த வழக்கில் முந்தைய நிலையே தொடரும். அதாவது விசாரணையின் போது இந்த 5 அதிகாரிகளும் கைது செய்யப்படமாட்டார்கள்.

 

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான முதலாவது குற்றப் பத்திரிகை கடந்த 2-ம் தேதி தாக்கல் செய்தது.

 

இதில் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. தவிர ரிலையன்ஸ் டெலிகாம், ஸ்வான் டெலிகாம், யுனிடெக் டெலிகாம் ஆகிய நிறுவனங்கள் மீதும் வழக்கு பதிவு செய்தது.

 

தினமணி