25 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்-ராஜேந்திரனுக்கு உளவுப் பிரிவு-ஜாபர் சேட்டுக்கு அகதி முகாம்!

19/05/2011 09:44

தமிழகத்தில் 25 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக மாற்றம் செய்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

மாநில சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக எஸ்.ஜார்ஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுக ஆட்சியில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கூடுதல் டிஜிபி என்ற அதிகாரமில்லாத பதவியில் முடக்கி வைக்கப்பட்டிருந்தார்.

அதே போல திமுக ஆட்சியில் மிக முக்கிய பொறுப்பான உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த ஜாபர் சேட், மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இது ஒரு 'டம்மி போஸ்ட்' என்பது குறிப்பிடதக்கது.

2 நாளில் சிறைத்துறையிலிருந்து உளவுப் பிரிவுக்கு வந்த ராஜேந்திரன்:

சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் டி.ராஜேந்திரன் உளவு பிரிவு கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்ற அதே தினமே இவர் சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக அதிகாரமற்ற பதவிக்கு தூக்கி அடிக்கப்பட்டார். ஆனால், நேற்று இவருக்கு மிக மிக முக்கிய பொறுப்பான உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபி பொறுப்பை தந்துள்ளார் ஜெயலலிதா.

திமுக ஆட்சியிலும் இவர் நடுநிலையோடு செயல்பட்டதால் இந்தப் பரிசு அவருக்குத் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்த அதிகாரிகள் மாற்றங்கள் குறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் நேற்றிரவு வெளியிட்ட உத்தரவு விவரம்:

- மாநில உளவு பிரிவு கூடுதல் டிஜிபியாக சிறைத்துறை கூடுதல் டிஜிபி டி.ராஜேந்திரன் (சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர்) நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியை நிர்வாகப்பிரிவு கூடுதல் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் கூடுதலாக கவனித்து வந்தார்.

- மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் கூடுதல் டிஜிபி எஸ்.ஜார்ஜ் மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மாற்றப்பட்டு உள்ளார்.

ஒதுக்கப்பட்ட ராதாகிருஷ்ணன்-ஜாங்கிட்:

- மாநில சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி கே.ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின்சார வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்பார். மின்சார வாரிய விஜிலென்ஸ் கூடுதல் டிஜிபி ஆஷீஸ் பெங்ரா மாற்றப்பட்டு உள்ளார்.

- மத்திய போலீஸ் பயிற்சி பள்ளி சிறப்பு அதிகாரியாக உள்ள கூடுதல் டிஜிபி எஸ்.ஆர்.ஜாங்கிட் நாகர்கோவிலில் உள்ள மாநில போக்குவரத்துக்கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஜாபர்சேட்டுத்து மண்டபம் அகதி முகாம்:

- கூடுதல் டிஜிபி எம்.எஸ்.ஜாபர்சேட் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமின் சிறப்பு அதிகாரியாக மாற்றப்பட்டு இருக்கிறார்.

- மேற்கு மண்டல ஐ.ஜி. பி.சிவனான்டி திருச்சியில் உள்ள மாநில போக்குவரத்துக்கழக தலைமை விஜிலென்ஸ் அதிகாரியாக பொறுப்பேற்பார்.

சென்னை கூடுதல், இணை கமிஷனர்கள்:

- மாநில நிர்வாகப் பிரிவு ஐ.ஜி. தாமரைக்கண்ணன் சென்னை நகரின் சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் உள்ள ஐ.ஜி. ஷகீல் அக்தர் மாற்றப்பட்டார்.

- சென்னை தலைமையகம் மற்றும் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா சென்னை நகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவியில் உள்ள கூடுதல் கமிஷனர் எம்.ரவி மாற்றப்பட்டுள்ளார்.

- மாநில தலைமையக ஐ.ஜி. அபய்குமார் சிங் சென்னை நகரின் தலைமையகம் மற்றும் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக பொறுப்பேற்பார்.

- திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. கே.பி.சண்முகராஜேஸ்வரன் சென்னை தெற்கு இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். தெற்கு இணை கமிஷனர் பெரியய்யா மாற்றப்பட்டு உள்ளார்.

- மத்திய அரசு பணியில் உள்ள டி.ஐ.ஜி. கே.சங்கர் மத்திய சென்னை இணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

- ஆயுதப்படை டி.ஐ.ஜி. என்.கே.செந்தாமரைகண்ணன் வடசென்னை இணை கமிஷனராக பொறுப்பேற்பார். வடசென்னை இணை கமிஷனர் சேஷசாயி பணிமாற்றப்பட்டு உள்ளார்.

- ஈரோடு அதிரடிப்படி போலீஸ் சூப்பிரண்டு எஸ்.வி.கருப்பசாமி சென்னை மயிலாப்பூர் துணை கமிஷனர் ஆகிறார். மைலாப்பூர் துணை கமிஷனர் எஸ்.ராஜேந்திரன் மாற்றப்பட்டார்.

- சென்னையில் உள்ள மாநில ஓ.சி.ஐ.யு. பிரிவு சூப்பிரண்டு திருநாவுக்கரசு தியாகராயநகர் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். தியாகராய நகர் துணை கமிஷனர் சண்முகவேலு மாற்றப்பட்டார்.

- தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கே.ஏ.செந்தில்வேலன் சென்னை அடையாறு துணை கமிஷனர் ஆகிறார். அடையாறு துணை கமிஷனர் சித்தண்ணன் மாற்றப்பட்டு உள்ளார்.

- கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் எம்.கோட்னிஸ் சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பொறுப்பேற்பார். புளியந்தோப்பு துணை கமிஷனர் என்.பாஸ்கரன் மாற்றப்பட்டார்.

- ராஜபாளையம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் பட்டாலியன் கமாண்டன்ட் அவினாஷ்குமார் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஆகிறார். வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் செந்தில்குமார் மாற்றப்பட்டு உள்ளார்.

- வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டி.எஸ்.அன்பு பூக்கடை துணை கமிஷனராக பொறுப்பேற்பார். பூக்கடை துணை கமிஷனர் பி.பகலவன் மாற்றப்பட்டார்.

- கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் என்.கண்ணன் திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார். திருவல்லிக்கேணி துணை கமிஷனர் என்.எம்.மயில்வாகனன் மாற்றப்பட்டு உள்ளார்.

பவானீஸ்வரி துணை கமிஷனர்:

- கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.பவானீஸ்வரி சென்னை கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் ஆகிறார். கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் லட்சுமி மாற்றப்பட்டார்.

- மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்ரா கார்க் சென்னை அண்ணா நகர் துணை கமிஷனர் ஆகிறார். அண்ணா நகர் துணை கமிஷனர் பன்னீர்செல்வம் மாற்றப்பட்டார்.

- தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆர்.சுதாகர் சென்னை தெற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் ஆகிறார். அந்த பதவியில் இருந்த துரைராஜ் மாற்றப்பட்டுள்ளார்.

- திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜோஷி நிர்மல் குமார் சென்னை வடக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக பொறுப்பேற்பார். அந்த பதவியில் இருந்த எஸ்.மனோகரன் மாற்றப்பட்டார்.

- ஆவடி வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் படை கமாண்டன்ட் அனிஷா உசேன் சென்னை போக்குவரத்து போலீஸ் மத்திய துணை கமிஷனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ரயில்வே டி.ஐ.ஜியாக பொன்மாணிக்கவேல்:

- விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. ஏ.ஜி.பொன்மாணிக்கவேல் மாநில ரயில்வே டி.ஐ.ஜி.யாக சென்னைக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். இந்த பதவியில் இருந்த பி.சக்திவேலு மாற்றப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் முக்கிய பொறுப்புகள் தரப்பட்ட பொன்மாணிக்கவேலுக்கு இந்த முறை ரயில்வே டிஐஜி பதவியே கிடைத்துள்ளது.

ஒன் இந்தியா தமிழ்