30 ஆயிரம் பேரை கொன்று குவித்த அர்ஜென்டினா முன்னாள் சர்வாதிகாரிக்கு ஆயுள் தண்டனை

16/04/2011 18:47

 

30 ஆயிரம் பேரை கொன்று குவித்த அர்ஜென்டினா முன்னாள்  சர்வாதிகாரிக்கு ஆயுள் தண்டனைஅர்ஜென்டினாவில் கடந்த 1976 முதல் 1983-ம் ஆண்டு வரை அர்ஜென்டினாவில் ராணுவ ஆட்சி நடந்தது. அப்போது ஜெனரல் பிக்னான் (83) சர்வாதிகாரியாக ஆட்சி நடத்தி வந்தார். அவரது ஆட்சியில், வன்முறைகள், படுகொலை சம்பவங்கள் பெருமளவில் நடந்தன.
 
இவர் தன்னை எதிர்த்த மக்களை கொன்று குவித்தார். அவரது ஆட்சியின் போது 30 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 1983-ம் ஆண்டு பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
 
கேம்யோ டி மயோ என்ற இடத்தில் உள்ள ராணுவதளத்தில் வைத்து 56 பேரை சித்ரவதை செய்து கொன்றார். இக்குற்றத்துக்காக அவருக்கு ஏற்கனவே 25 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தன்னை எதிர்த்த அரசியல் தலைவர்களையும் கொன்று குவித்ததாக மற்றொரு வழக்கு விசாரணை அவர் மீது கோர்ட்டில் நடந்து வந்தது.
 
இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பை அர்ஜென்டினா மக்கள் வரவேற்றுள்ளனர். இது அர்ஜென்டினா மக்களுக்கு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என வர்ணித்துள்ளனர்.

 

மாலைமலர்