4-வது நாளாக தொடரும் மழை ராமநாதபுரம் தீவாக மாறியது; மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்

25/11/2010 17:30

இலங்கையையொட்டிய தென்மேற்கு வங்ககடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதாலும், தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதாலும் தமிழகத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது.
 
குறிப்பாக தென்மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் கடந்த 4 நாட்களாக இடைவிடாத மழை பெய்து வருகிறது.
 
இந்த தொடர் மழையால் அணைகள், கண்மாய்கள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றன. பல கிராமங்களுக்கு வெள்ளம் புகுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 4-வது நாளாக பலத்த மழை பெய்கிறது. கார்குடி, காரேந்தல், சித்தூர், வன்னிவயல், பரமக்குடி, ராமேசுவரம், கமுதி, முதுகுளத்தூர் ஆகிய ஊர்களை சுற்றி உள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது. வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் தங்கள் உடமைகளுடன் மேடான இடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அத்துடன் அந்த கிராமங்களுக்கு போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
 
கண்மாய்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் கிராமங்களை சூழ்ந்துள்ளதால் பெரும்பாலான இடங்களில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது. பல பகுதிகளில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது.
 
ராமேசுவரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 50 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. காட்டாற்று வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட விஷ பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். 
 
4-வது நாளாக தொடரும் மழை  ராமநாதபுரம்  தீவாக மாறியது;  மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானம் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. நகர் பகுதியில் உள்ள பள்ளிக்கூடங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிசைகள் வெள்ளத்தில் மிதக்கிறது. இதனால் ராமநாதபுரம் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரோடுகளில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது.
 
சுமார் 1 1/2 லட்சம் எக்டேர் நெற்பயிர் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். வைகை ஆற்றில் வெள்ள பெருக்கு அதிகரித்துள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இருந்த போதிலும் அவர்கள் இரவு முழுவதும் தூங்காமல் விழித்து இருந்தனர்.
 
ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் தற்போது 80 சதவீதம் நிறைந்துள்ளதாக பொதுப்பணித்துறை நிர்வாக பொறியாளர் வள்ளியப்பன் தெரிவித்தார்.
 
மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை போலீசார், தீயணைப்பு துறையினர், பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். அங்கு சீரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் ராமநாத புரம் மாவட்டம் தொடர் மழையால் தீவாக மாறி உள்ளது.
 
பரமக்குடி பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பரமக்குடியில் உள்ள ஆற்றுப்பாலம் உடைக்கப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வருகிறது. தற்போது பெய்து வரும் கனமழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் அங்கு அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. அங்கு வாழும் மக்கள் குடிநீர், பால் மற்றும் உணவு பொருட்கள் கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். வைகை கரையோரம் வசித்து வந்த நரிக்குறவர்கள் பாதுகாப்பான இடவசதி இன்றி மழையில் நனைந்த படி ஆங்காங்கே தஞ்சம் புகுந்துள்ளனர்.

maalaimalar.com