50 ஆண்டுகளில் 20 நாடுகள் அழியும் சிவகங்கையில் விஞ்ஞானி கருத்து

17/09/2012 21:16

 

சிவகங்கை:""அதிகளவு கரியமில வாயு வெளியேறுவதை தடுக்காவிட்டால், 50 அல்லது 100 ஆண்டுகளில் உலகில் 20 நாடுகள் வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும்,'' என, மாநில சுற்றுச்சூழல் கல்வி மைய பொறுப்பு விஞ்ஞானி ராம்ஜி, சிவகங்கையில் பேசினார். "கால நிலை மாற்றம், நீடித்த வளர்ச்சி பணிமனை' பயிற்சியில், அவர் பேசியதாவது:
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மத்திய அரசு, "பரியாவரன் மித்ரா' திட்டத்தை துவக்கியுள்ளது. இத்திட்டம் குறித்த கருத்துக்கள், ஆசிரியர்கள் மூலம், மாணவர்களுக்கு சேர்க்கப்படுகின்றன. அதிகமான கரியமில வாயு வெளியேற்றத்தால், காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன.


பன்னாட்டு ஆய்வுக் குழுவின் அறிக்கைப்படி, 50 அல்லது 100 ஆண்டுகளில், உலகில், 20 நாடுகள், வரைபடத்திலிருந்தே இல்லாமல் போய்விடும் அபாயம் உள்ளது. இந்தியா உட்பட 16 நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், இதில் அடங்கும். கடந்த 200 ஆண்டுகளில், உலகளவில், 1.5 செல்சியஸ் வெப்பமும், 20 செ.மீ., கடலரிப்பும் அதிகரித்துள்ளன.


உறை பனியின் உருகும் நிலை அதிகரித்து வருவதால், இமய மலையை நம்பியுள்ள, 20 கோடி மக்கள் பாதிக்கப்படலாம்.காலநிலை மாற்றத்தை சீராக்க, கார்பன்- டை- ஆக்சைடு பயன்பாட்டை குறைக்க வேண்டும். மாணவர்களை ஊக்கப்படுத்தி, நிறைய மரங்கள் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளிலிருந்து கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கவும், காடுகள் அழிப்பை தடுக்கவும், அதிகளவு வாகன பயன்பாட்டை குறைக்கவும், வலியுறுத்த வேண்டும்.இல்லையெனில், எதிர்காலத்தில் பெருமளவில் விவசாயம் பாதித்து, மக்கள் உணவுக்கு கஷ்டப்படும் நிலை உருவாகலாம். 
இவ்வாறு பேசினார்.