81 வகையான சட்டங்கள் இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை: கவிஞர் சல்மா

20/10/2010 16:33

இந்தியாவில் பெண் பாதுகாப்புக்காக 81 வகையான சட்டங்கள் இருந்தும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலைதான் உள்ளது. பெண்கள் வன்முறைக்கு உள்ளாகும் நிலை இன்றும் உள்ளது. சட்டங்களினாலும், திட்டங்களினாலும் இதை முறியடிக்க முடியாது. பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு போராடினால்தான் முறியடிக்க முடியும் என தமிழக சமூகநல வாரியத் தலைவர் கவிஞர் சல்மா தெரிவித்தார்.

 

சிதம்பரத்தை அடுத்த கிள்ளையில் தமிழ்நாடு சமூகநல வாரியம் சார்பில் ""பெண் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் சமமற்ற பாலியல் விகிதாசாரத்தினால் ஏற்படும் எதிர்கால விளைவுகள்'' குறித்த 2 நாள் கருத்தரங்கு தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கை தமிழக சமூக நலவாரியத் தலைவரும் கவிஞருமான சல்மா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துப் பேசினார்.

 

அவர் பேசியது: பெண்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால்தான் சமூக மாற்றம் ஏற்படும். இந்த 21-ம் நூற்றாண்டிலும் பெண் கருவை அழிக்கும் நிலை உள்ளது. வரதட்சிணை கொடுமையால் பெண் கொலை நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான உரிமைகள் சரியானபடி அவர்களுக்கு கிடைப்பதில்லை. இந்த நிலையை மாற்ற அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 10-ம் வகுப்பு வரை படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் உதவித் தொகை, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தொழில் தொடங்க கடனுதவி உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது.

இஸ்லாமிய சமுதாய பெண்கள் கல்வி அறிவு பெறாதவர்களாக உள்ளனர். இஸ்லாமிய மதத்தில் பெண்கள் கல்வி பயிலக் கூடாது என்று கூறப்படவில்லை. இஸ்லாமிய பெண்கள் அரசு திட்டங்களை பெற்று பயனடையவில்லை. அத்தகைய பெண்கள் அதிகம் வாழும் கிள்ளை பகுதியில் அப்பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது. இஸ்லாமிய பெண்கள் இதில் பங்கேற்று கருத்துகளைப் பெற்று யோசித்து உணர்ந்து செயல்பட வேண்டும்.

 

பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பாலியல் விகிதாசாரம் குறைந்துள்ளது. இந்தியாவில் 20 ஆண்டுகளில் 1 கோடி பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளனர். பெண்கள் பிறப்பு விகிதாசாரம் குறைந்ததால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்ற பயமும், வருத்தமும் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு போராட வேண்டும் என கவிஞர் சல்மா தெரிவித்தார்.

 

விழாவுக்கு கோட்டாட்சியர் அ.ராமராஜூ தலைமை வகித்தார். கிள்ளை பேரூராட்சி தலைவர் எஸ்.ரவிச்சந்திரன், கடலூர் மாவட்ட சமூகநல அலுவவர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் வாழ்த்துரையாற்றினார். தமிழக சமூகநல வாரிய அலுவலர் டொமினிக் வரவேற்றார். நலவாரிய இணை இயக்குநர் குமாரபிரசாத் கருத்தரங்கு குறித்து விளக்கவுரையாற்றினார்.

 

கருத்தரங்கில் 40-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். குறிப்பாக இஸ்லாமிய சமுதாய பெண்கள் அதிகம் பேர் பங்கேற்றனர். ஏக்தா தொண்டு நிறுவன ஒருங்கிணைப்பாளர் தமிழ்மணி நன்றி கூறினார்.

தினமணி 20-10-10