அல்குர்ஆனின் சிறப்புகள்

04/10/2012 23:31

 

காலமாற்றங்கள் அல்குர்ஆனை காணடிக்க முடியவில்லை. எல்லாக் காலங்களையும் வென்றதாக எக்காலத்துக்கும் உகந்ததாக திருமறைக்குர்ஆன் ஜீவனோடு பிரகாசிக்கின்றது. விஞ்ஞான யுகம், கம்ப்யூட்டர் யுகம் என்றெல்லாம் ஏதேதோ யுகங்கள் மாறிமாறி வந்தாலும் அந்த யுகங்களால் குர்ஆனை பொய்ப்பிக்க முடிவதில்லை. 
 
நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் 1400 ஆண்டுகளுக்கு முன் இறக்கியருளப்பட்ட மகத்தான நுண்ணறிவாளனாகிய அல்லாஹ்வின் வாக்காகிய இந்தக் குர்ஆனை மெய்ப்படுத்தும் சேவையைத்தான் செய்துவருகின்றன...
 

 உலகில் ஏற்படும் அரசியல் மாற்றங்களும் ஆட்சி மாற்றங்களும் திருமறைக் குர்ஆனுக்கு எந்த பாதிப்பையும் இதுநாள்வரை ஏற்படுத்த முடியவில்லை. ஒரு கொள்கையைக் கொண்டவர் அரசுக்கட்டிலில் ஏறினால் தனக்கு வேண்டாத, எதிரான கொள்கையையும் அது சம்பந்தமானவைகளையும் அழித்து விடுவதோடு அவற்றை பின்பற்றும் மக்களையும்; கேவலப்படுத்தி விடுவர். ஆனால் அப்படிப்பட்ட அவர்களால் திருக்குர்ஆனை ஒன்றும் செய்யமுடியவில்லை.
 
இன்றைக்கு உலகிலிருக்கும் வல்லரசுகள் இஸ்லாத்தையும், அதைப் பின்பற்றும் மக்களையும் தீவிரவாதிகளாக, தீண்டத்தகாதவர்களாக சித்தரித்த போதும் திருமறைக் குர்ஆனை அவர்களால் காயப்படுத்த முடியவில்லை. மாறாக கலங்கியிருக்கும்; தன் சமுதாய மக்களை இன்றும் அது காத்து நிற்கும் அரணாக இருப்பதுடன், களங்கம் சுமத்தும் வல்லரசுகளுக்கு கண்ணியமிக்க பதிலடி கொடுத்து கதிகலங்கச் செய்கிறது. தானும் தன்னை உண்மையாகப் பின்பற்றும் மக்களும் அறவழியில் நிலைத்திருப்பவர்கள் என்று உலக அரசாங்கங்களுக்கு ஓங்கி உரத்துச் சொல்கிறது இந்த திருமறைக் குர்ஆன். இதற்காக அதற்கு எந்தவொரு அரசாங்கத்தின் துணையோ, படைபலமோ ஆதரவாக இல்லை. இதிலிருந்தே குர்ஆன் வல்லமையும், புகழுக்குரிய அல்லாஹ்வின் வாக்கு என்பதற்கு வலுவான அத்தாட்சியல்லவா?! 
 
வல்ல ரஹ்மான் இறக்கியருளிய அல்குர்ஆனைப் பற்றியும் அதன் சிறப்புகளைப் பற்றியும் இக்குர்ஆனை வேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பலர் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றார்கள். போலியான மதங்களில் இருப்பவர்கள் கூட தங்களுடைய வேதத்தைப் பற்றி அறிந்து அதன்படி செயல்படுகிறார்கள். ஆனால் முஸ்லிம்களோ வெறும் பெயர் தாங்கிகளாகவே இருந்து வருகின்றார்கள். அப்படி இருப்பவர்கள் அந்தத் தன்மை யிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும்.
 
குர்ஆன் என்பது உலக மக்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டுவதற்காக இறைவனால் நபி(ஸல்) அவர்களுக்கு இறக்கி அருளப்பட்ட வேதமாகும். இதை அல்லாஹ் தன் திருமறையில், 
 
'இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில்தான் அருளப் பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும் (அல்குர்ஆன் 2:185) 
 
'இந்தக் குர்ஆன் நேரானதற்கு வழி காட்டுகிறது. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு பெரிய கூலி உள்ளது (அல்குர்ஆன் 17:9) 
 
'அலிஃப், லாம், றா. மனிதர்களை அவர்களது இறைவனின் விருப்பப்படி இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கும், புகழுக்குரிய மிகைத்தவனின
 
பாதைக்கும் நீர் கொண்டு செல்வதற்காக உமக்கு இவ்வேதத்தை அருளினோம் (அல்குர்ஆன் 14:1) 
 
இப்படி இந்தக் குர்ஆனுக்கு இன்னும் பல ஏராளமான சிறப்புக்களை சொல்லிக்கொண்டே போகலாம். 
 
ஒன்றுக்கு பத்து நன்மை!
 
இந்த உலகத்தில் எந்த ஒரு நன்மையையும் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அதற்காக சில கஷ்டங்களை அனுபவித்த பிறகே அதன் பலனை அனுபவிக்க முடிகின்றது. ஆனால் அவை எல்லாமே இந்த உலகத்துடன் அழிந்து போய் விடுகின்றன. எந்த அளவிற்கு என்றால், ஒரு சில காரியங்களை நாம் மிகவும் சிரமப்பட்டுச் செய்கின்றோம் ஆனால் அதன் பலன் ஒரு மணி நேரத்;திலோ அல்லது ஒரு மாதத்திலோ அல்லது ஒரு வருடத்;திலோ முடிந்து விடுகின்றது. அந்த அளவிற்குத் தான் அதன் பலன்கள் நிலையற்றவையாக உள்ளன. 
 
ஆனால் நிலையானதும், மிகவும் எளிதாக நன்மையைப் பெற்றுத் தருவதுமான செயல் ஒன்று இருக்குமெனில் அது வல்ல ரஹ்மானின் திருமறைக் குர்ஆனை ஓதுவதில்தான் இருக்கும். இந்தக் குர்ஆனை ஓதுவதற்காக நாம் எந்த ஒரு சிரமத்தையும் மேற்கொள்ளத் தேவையில்லை. அதாவது தொழுகை என்ற வணக்கத்தை எடுத்துக் கொண்டால் குறிப்பிட்ட நேரத்தில் தொழவேண்டும். உளூச் செய்யவேண்டும். ஆண்களாயிருந்தால் பள்ளிக்குச் சென்று ஜமாஅத்துடன் தொழ வேண்டும் என்ற நிபந்தனைகள் இருக்கின்றன. இதனடிப்படையில் செய்தால்தான் தொழுகையின் முழுமையான நன்மைகளை அடைய முடியும். 
 
குர்ஆன் ஓதுவதைப் பொறுத்த வரையில் இது போன்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லை. இருந்த இடத்தில் இருந்து கொண்டே அதிகமான நன்மைகளை அள்ளி விடலாம். இது தொடர்பாக நபி(ஸல்) அவர்களின் அமுதமொழிகள்.... 
 
'அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன் என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: திர்மிதி 2910 
 

மறுமையில் பரிந்துரை!



இன்றைய முஸ்லிம்களைப் பொறுத்தவரை உண்மைச் சான்றுகளால் நிறைந்து விளங்கும் இறைவேதமாம் 
 
அல்குர்ஆனுடைய அருமை, பெருமை தெரியாமல் இருக்கின்றார்கள். தங்களுடைய வாழ்க்கையின் ஆதாரச் சுருதியாய் இருக்கும் இறைவேதத்தை அணுகுவதிலும், ஆய்வு செய்வதிலும் தங்களுடைய பொன்னான நேரங்களை பயன்படுத்தாமல் பயனற்ற காரியங்களில் நேரத்தை வீணடிக்கிறார்கள். 
 
 அது மட்டுமல்லாமல், இந்த உலக வாழ்க்கைக்காக என்னவென்ன முயற்சிகள் செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் சிரமம் பார்க்காமல் செய்கின்றார்கள். உதாரணமாக, ஒரு வேலை வேண்டும் என்றால் அதற்காகப் பல மனிதர்களை சிபாரிசுக்காகத் தேடி அலைகின்றார்கள். நிலையற்ற உலகிற்கு இப்படி முயற்சி செய்கின்றார்கள். ஆனால் நிலையான மறுமை வாழ்க்கைக்கு சிபாரிசாக வரக்கூடிய குர்ஆனை மறந்து விடுகின்றார்கள். 
 
இதைப்பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறும் போது... 
 
நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது மறுமை நாளில் அதைச் சார்ந்கவருக்கு பரிந்துரையாக வரும். அறிவிப்பவர்: அபூ உமாமா(ரலி) - முஸ்லிம் 804 
 
இரு மடங்கு நன்மை! 
 
குர்ஆனை ஓதத் தெரியவில்லையே என்று நினைப்பவர்களுக்கும் மார்க்கம் ஒரு நற்செய்தி கூறுகின்றது. அதாவது முயற்சி திருவினையாக்கும் என்பது போன்று ஒரு மனிதன் குர்ஆனை ஓதுவதற்கு முயற்சி செய்கின்றான். அதன் மூலம் அவனுக்குப் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. அதையும் பொருட்படுத்தாமல் அவன் திக்கித் திணறி ஓதுகின்றான் என்றால் அதற்காக அவனுக்கு இரு மடங்கு கூலி இருக்கின்றது. 
 
'குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயி'h(ரலி) நூல்: முஸ்லிம் 798 
 
பாழடைந்த வீடு! 
 
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.... 
 
'குர்ஆனிலிருந்து சிறிதளவுகூட தம் உள்ளத்தில் மனனம் இல்லாதவர் பாழடைந்த வீடு போன்றவராவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரலி) - திர்மிதீ 
 
மனிதரில் சிறந்தவர்!
 
இந்த உலகில் நமக்குப் பிடித்தவர்கள் நம்மைப் பாராட்டினால் மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஆனால் நம் அனைவருக்கும் உயிரை விடவும் மேலான நபி(ஸல்) அவர்களின் வாயால் சிறந்தவர் என்ற பாராட்டைப் பெற வேண்டும் என்றால் அது திருக்குர்ஆன் மூலமே கிடைக்கின்றது. 
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.... 
 
'உங்களில் சிறந்தவர் யார் என்றால், யார் குர்ஆனைத் தானும் கற்று, பிறருக்கும் கற்றுக் கொடுக்கின்றாரோ அவர்தான்' அறிவிப்பவர்: உஸ்மான்(ரலி) நூல்: புஹாரி 5207 
 
அல்லாஹ்வின் அருள்!
 
'குர்ஆன் ஓதப்படும் போது அதை செவிமடுங்கள். வாய் மூடுங்கள். நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்' (அல்குர்ஆன் 7:204) 
 
குர்ஆனை ஓதும்போது நன்மைகள் கிடைப்பது போன்று பிறர் ஓதுவதைக் கேட்கும் போதும் நன்மை கிடைக்கும். 
 
ஷைத்தானை விரட்டும் மருந்து!
 
நமக்கெல்லாம் ஜென்ம விரோதியாக இருக்கின்ற ஆணவம் கொண்ட ஷைத்தானை விரட்டும் ஒரு மருந்தாக இந்தக் அல்குர்ஆன் இருக்கிறது. 
'உங்கள் வீடுகளை மண்ணறைகளாக ஆக்கி விடாதீர்கள். எந்த வீட்டில் சூரத்துல் பகரா ஓதப்படுகின்றதோ அந்த வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டு ஓடுகின்றான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம் 780 
 
பாதுகாப்பு கிடைப்பது!
 
உலகில் பிறந்த அனைவருக்கும் பாதுகாப்பு என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஷைத்தானை விட்டு பாதுகாப்புப் பெறுவது மிகவும் அவசியமான ஒன்றாகும். அவன் எல்லா நேரத்திலும் மனிதனை ஆட்டிப் படைப்பதில் குறிக்கோளாய் இருப்பான். 
 
உதாரணமாகச் சொல்வதென்றால், ஒரு மனிதனுக்கு நிம்மதியைப் பெற்றுத் தரக்கூடிய தூக்கத்திலும் கெட்ட கனவை ஏற்படுத்தி, அதன் மூலம் நம்முடைய நிம்மதியைக் கெடுப்பான். இது போன்ற ஷைத்தானுடைய தீங்குகளை விட்டும் பாதுகாக்கக் கூடியதாக அல்குர்ஆன் அமைந்துள்ளது. 
 
நீங்கள் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்ஸியை ஓதுங்கள். உங்களுடன் ஒரு பாதுகாவலர் (வானவர்) இருந்து கொண்டே இருப்பார். காலை வரை ஷைத்தான் உங்களை நெருங்க மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புஹாரி 3275 
 
எச்சரிக்கை!
 
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.... 
 
'குர்ஆனை அடிக்கடி ஓதி அதனைப் பேணிப் பாதுகாத்து வாருங்கள். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (திரும்பத் திரும்ப ஓதி அந்தக் குர்ஆனைப் பாதுகாக்க வில்லையென்றால்) அந்தக்குர்ஆன், கயிற்றால் கட்டப்பட்டிருந்த ஒட்டகை கட்டிலிருந்து விலகி விரண்டோடுவதை விட மிக வேகமாக (உங்கள் உள்ளங்களிலிருந்து) விரண்டோடிவிடும் அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அ';அரீ(ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம் 
 
அழகிய உதாரணத்துக்குரியவர்! 
 
இவ்வுலகில் வாழும் அனைவரும் ஒரு நல்ல உதாரணமாக இருப்பதற்குத்தான் விரும்புவார்கள். கெட்டவனாக இருந்தாலும் கெட்ட உதாரணமாக இருப்பதற்கு விரும்ப மாட்டான். இப்படி எல்லோருமே விரும்பக்கூடிய ஒரு நல்ல உதாரணத்தைப் பெற வேண்டும் என்றால் இந்தக் குர்ஆனை ஓதுவதன் மூலமே இந்தச் சிறப்பைப் பெற்றுக்கொள்ள முடியும். 
 
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்... 
 
'குர்ஆனை ஓதுகின்ற (நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று! வாசனையும் நன்று! (நல்லவராக இருந்து) குர்ஆன் ஓதாமல் இருப்பவர் பேரீச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று! அதற்கு வாசனை கிடையாது! தீயவனாகவும் இருந்து கொண்டு குர்ஆனை ஓதி வருகின்றவனின் நிலை துளசிச்செடியின் நிலையை ஒத்து இருக்கின்றது. அதன் வாசனை நன்று! சுவையோ கசப்பு! தீமையும் செய்து கொண்டு குர்ஆனையும் ஓதாமல் இருப்பவனின் நிலை குமட்டிக் காயின் நிலையை ஒத்திருக்கின்றது. அதன் சுவையும் கசப்பு! அதற்கு வாசனையும் கிடையாது அறிவிப்பவர்: அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) நூல்: புஹாரி 5020 
 
இது போன்று ஏராளமான சிறப்புக்கள் திருக்குர்ஆனுக்கு இருக்கின்றன. நாம் அனைவரும் அதன் சிறப்புகளை உணர்ந்து செயல்பட வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக! 
 
                                                                              
 அன்புடன் வெளியிடுவோர்...  
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,