எக்ஸ்பிரஸ் ரெயிலில் 505 கோடி ஹெராயின் போதைப்பொருள் மற்றும் வெடிமருந்து தோட்டாக்கள் சிக்கியது

08/10/2012 20:49

பாகிஸ்தானில் இருந்து புதுடெல்லிக்கு இன்று சம்ஜ்ஹவுதா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. இந்த ரெயில் பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் வந்தபோது, இந்திய பாதுகாப்பு படையினர் திடீர் சோதனை செய்தனர். அப்போது அதில் உள்ள ஒரு பெட்டியில் சோதனையிட்டபோது, பண்டல் பண்டலாக ஹெராயின் போதைப்பொருள் மற்றும் வெடிமருந்து தோட்டாக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அந்த பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி, வாகா ரெயில் நிலைய குடோனில் வைத்தனர். மொத்தம் தலா ஒரு கிலோ கொண்ட 101 ஹெராயின் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.505 கோடியாகும். ஆனால் வெடிபொருட்கள் பற்றிய முழு விவரங்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக பாகிஸ்தான் மட்டுமின்றி அண்டை நாடுகளில் இருந்து அன்னிய சக்திகள் இதுபோன்று வெடிமருந்து மற்றும் போதைப்பொருட்களை அனுப்பி வைத்திருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் சட்டப்படி தடை செய்யப்பட்ட இந்தப் பொருட்களை மற்ற மாநிலங்கள் மற்றும் சர்வதேச சந்தைகளில் விற்பனை விற்பனை செய்வதற்கு பஞ்சாப் மாநிலம் ஒரு புகலிடமாக உள்ளதாகவும் போலீசார் கூறுகின்றனர்.

பஞ்சாப் சர்வதேச எல்லையில் இதுவரை 230 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.