தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த கன மழைக்கு 10 பேர் பலி!

19/10/2012 13:51

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதன் காரணமாக சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் மாநிலத்தில் கன மழை மற்றும் இடி, மின்னலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை அயனாவரம், தண்டையார்பேட்டையில் மின்சாரம் பாய்ந்ததில் தலா ஒருவரும், நெல்லை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் மூன்று பேரும், திருத்துறைப்பூண்டியில் இடிதாக்கி 2 பேரும், சிவகாசி அருகே மின்னல் தாக்கி 3 பேரும் உயிரிழந்துள்ளனர்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). இவர் சகோதரி மகனை பஸ்ஸில் ஏற்றுவதற்காக வீட்டிலிருந்து வெளியே வந்தபோது மழைநீர் தேங்கிய பள்ளத்தில் கால் வைத்தபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். தண்டையார் பேட்டையைச் சேர்ந்த லாரி கிளீனர் மணிகண்டன் (22), வியாழக்கிழமை காலை தனது நண்பர்களுடன் தேனீர் அருந்த கடைக்குச் சென்றபோது மழைநீர் பள்ளத்தில் கால் வைத்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே எடையூர் என்ற இடத்தில் அய்யாக்கண்ணு (50), அவரது மருமகன் மகாலிங்கம் (40) இருவரும் வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது இடிதாக்கி அதே இடத்தில் உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள பாறைப்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் கண்ணன் (18), இவரது சகோதரி தங்கமுனீஸ்வரி (32) இருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர். இருவரும் பட்டாசு ஆலையில் பணிமுடித்துவிட்டு வீடு திரும்பியபோது இச்சம்பவம் நேரிட்டது. ,இதேபோல அனுப்பங்குளத்தைச் சேர்ந்த குடிநீர் பம்பு ஆபரேட்டர் காளீஸ்வரன், கண்மாய்கரையோரம் நடந்துவந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

நெல்லை மாவட்டத்தில் பாலாமடையைச் சேர்ந்த நடராஜன் (55), கீழபாலைமடையைச் சேர்ந்த சடலைமுத்து மகன் முருகன் (45) இருவரும் குளத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் முருகன் அதே இடத்திலேயே உயிரிழந்தார். நடராஜன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல தச்சுத் தொழிலாளி மாரியப்பன் (26)தொழில் நிமித்தமாக வடமலாபுரத்திலிருந்து நகரம் கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற போது மின்னல் தாக்கி உயிரிழந்தார். ராதாபுரம் அருகேயுள்ள சௌந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த விவசாயி அலெக்ஸ் (30) தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது மின்னதாக்கி உயிரிழந்தார்.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவாரூர் மாவட்டம் குடவாசலில் 80 மில்லி மீட்டரும், சென்னையில் 70 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

கடலோர மாவட்டங்களில் கனமழை: காற்றழுத்த தாழ்வு நிலை வடக்கு, வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மாநிலத்தின் பிற இடங்களில் பரவலாக மழை பெய்யும். சென்னையைப் பொருத்த வரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, பருவமழை காரணமாக ஏற்படும் விளைவுகளைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. குறிப்பாக, கடலோர மாவட்டங்களில் வழக்கமாக ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கு தீவிரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வாக்கி-டாக்கிகள்: பருவமழை காலத்தில் கடலோர மாவட்டங்களில் மீனவ மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர்களின் நிலை குறித்த தகவல்களை உடனடியாக அரசுத் துறைகளுக்கு பகிர்ந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 13 கடலோர மாவட்டங்களில் வாக்கி-டாக்கிகளை மாவட்ட அளவிலேயே வாங்கிக் கொள்ள வருவாய்த் துறை உத்தரவிட்டுள்ளது.

பருவமழையை எதிர்கொள்வது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர்களுடன் வியாழக்கிழமை சென்னையில் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் ஆய்வு நடத்தினார்.

நிவாரண உதவிகள்: பருவமழையால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பருவமழையால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்குத் தேவையான நிதியை மாவட்ட பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்தே வழங்க மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மண்ணெண்ணெய், அரிசி போன்ற அத்தியாவசியப் பொருள்களை உடனடியாக வழங்கிடவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

பருவமழையால் பாதிக்கப்பட்டு மனிதர்கள் மற்றும் கால்நடைகளின் உயிரிழப்புகள் குறித்த தகவல்களை உடனடியாகத் தெரிவிக்க வசதியாக, சென்னை சேப்பாக்கத்திலுள்ள வருவாய் நிர்வாக ஆணையாளர் அலுவலகம் மற்றும் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் அலுவலகத்திலும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படுகிறது.

குளங்கள், குளக்கரைகள்: கனமழை காரணமாக, குளங்களின் கரைகள் உடைந்து மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க கிராமங்களிலுள்ள குளங்களின் கரைகளை வலுப்படுத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் தகவல்களுக்காக காத்திருக்காமல், ஆய்வு மையத்தின் வரைபடத்தைப் பார்த்தே பருவமழையின் தீவிரத்தை அறிந்து கொள்ள வேண்டுமென அலுவலர்களுக்கு வருவாய்த் துறை உத்தரவிட்டுள்ளது.