தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

26/07/2012 11:07

தமிழகத்தில் வரி சீரமைப்பு காரணமாக புதன்கிழமை முதல் பெட்ரோல் லிட்டருக்கு 97 காசும், டீசல் லிட்டருக்கு 15 காசும் விலை குறைந்துள்ளது.

 

 தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இரண்டு நாள்களுக்கு முன்பு பெட்ரோல் விலை திடீரென உயர்த்தப்பட்டது. லிட்டருக்கு 89 காசு உயர்த்தப்பட்டு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.27-லிருந்து ரூ.73.16 ஆக விற்கப்பட்டு வந்தது.

 

 இந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை பிற்பகல் முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.72.19-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசலும் லிட்டருக்கு 15 பைசா குறைக்கப்பட்டுள்ளது.

 

 காரணம் என்ன? பெட்ரோல், டீசல் விலை குறைப்பு தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான காரணம் குறித்து இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

 

 தமிழகத்தில் வரி சீரமைப்பு காரணமாக இப்போது ஆயிரம் லிட்டருக்கு ரூ.30 என்ற அளவில் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.73.16-லிருந்து ரூ.72.19 ஆக குறைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

 இதேபோன்று, டீசலும் லிட்டருக்கு 15 பைசா குறைக்கப்பட்டுள்ளதால், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.43.26-லிருந்து ரூ.43.11 ஆக விற்கப்பட்டு வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு உயர்த்தப்பட்ட பெட்ரோல் விலை திடீரென இப்போது குறைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

 இப்போதைய பெட்ரோல் விலை (ஒரு லிட்டர்): ரூ.72.19; டீசல் விலை: ரூ.43.11

 

Dinamnai.com