தற்கொலை செய்ய தேவைப்பட்ட பணத்திற்காக வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 14 வயது ரஷ்ய சிறுமி கைது

10/09/2012 01:06

 

மாஸ்கோ: தற்கொலை செய்து கொள்ள தேவையான பணத்திற்காக, முகமூடி அணிந்து வந்து வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற 14 வயது சிறுமியை போலீசார் கைது செய்தனர்.

ரஷ்யாவில் உள்ள இஷ்கெவ்ஸ்க் மாகாணத்தில் உள்ள உரால்ஸ் நகரில் ஒரு வங்கி உள்ளது. இங்கு வெள்ளை முகமூடி அணிந்து கொண்டு கையில் கத்தியுடன் நுழைந்த சிறுமி ஒருவர், வங்கி ஊழியர்களை மிரட்டி பணத்தை தருமாறு கூறினார்.

அப்போது வங்கியில் இருந்து பாதுகாப்பு ஊழியர்கள், சிறுமியை சுற்றி வளைத்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது, வங்கியில் கொள்ளையடித்து விட்டு அந்த பணத்தில் வெளியூருக்கு சென்று தற்கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து விசாரணை அதிகாரிகள் கூறியதாவது,

நகரின் முக்கிய பகுதியில் விறுவிறுப்பாக இயங்கி வரும் வங்கியினுள் நுழைந்த 14 வயதுள்ள சிறுமி கத்தி காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவளை பிடித்தனர். அப்போது எனக்கு 6,200 டாலர்கள் கொடுத்தால் போதும் என்று சிறுமி அலறியுள்ளார்.

கொள்ளையடிக்க முயன்ற சிறுமியின் தாயார் விவாகரத்து செய்த பிறகு வேறொருவரை திருமணம் செய்துள்ளார். அவர் செய்த கொடுமைகளை தாங்க முடியாமல், வீட்டை விட்டு ஓடி வந்துள்ளார். வங்கியில் கொள்ளையடித்து கிடைக்கும் பணத்தில் வெளியூருக்கு, அங்கு தற்கொலை செய்து கொள்ள சிறுமி திட்டமிட்டிருந்தார் என்றனர்.

இந்த நிலையில் விசாரணை முடியும் வரை உரால்ஸ் நகரை விட்டு வெளியேற கூடாது என்ற நிபந்தனையுடன் போலீசார் அவளை விடுவித்தனர். ரஷ்யாவில் உள்ள விதிமுறையின் படி 14 முதல் 16 வயதிற்குட்பட்டோர் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டால், வாலிபர்களுக்கான சிறையில் அடைக்கப்படுவது வழக்கம்.

Oneindiatamil