திருச்சி அருகே கார் மீது பஸ் மோதி விபத்து: 20 பேர் காயம்

02/10/2012 09:15

 

 திருச்சி அருகே சாலையோரத்தில் நிறுத்த முயன்ற கார் மீது ஆம்னி பஸ் ஒன்று மோதியதில், காரில் பயணித்த 5 பேர் உட்பட மொத்தம் 20 பேர் காயமடைந்தனர்.

மதுரை கோவில்பாளையத்தை சேர்ந்தவர் முபாரக்(40). இவர் தனது குடும்பத்தினருடன் வேலூருக்கு சென்றுவிட்டு, மதுரைக்கு காரில் திரும்பி கொண்டிருந்தார். இன்று அதிகாலை 4.30 மணியளவில் கார் திருச்சி-மதுரை சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது முபாரக் சாலையோரத்தில் காரை நிறுத்த முயன்றார்.

அப்போது சென்னையில் இருந்து மதுரையை நோக்கி வேகமாக வந்த ஆம்னி பஸ், காரை பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. முபாரக் திடீரென காரின் வேகத்தை குறைத்த போது, ஆம்னி பஸ் டிரைவர் செல்வராஜ் பஸ்சை நிறுத்த முயன்றார்.

ஆனால் வேகமாக வந்த பஸ், காரின் பின்பகுதியில் மோதியது. இதில் முபாரக்கின் கார் சாலையின் இடதுபுறத்தில் இருந்த பள்ளத்திற்குள் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த முபாரக், அவரது உறவினர்களான லட்சுமி, தாரணி, வாசுகி உட்பட 5 பேர் காயமடைந்தனர். மேலும் ஆம்னி பஸ்சை நிறுத்த திடீரென பிரேக் போடப்பட்டதால், பஸ் பயணிகளில் 15 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருச்சி போக்குவரத்து தெற்கு புலனாய்வு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆண்டாள் ஈஸ்வரி, ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.