பேஸ்புக்கில் எரிக்கப்பட்ட திருகுரான் படம்: வங்கதேசத்தில் 11 புத்தர் கோவில்களுக்கு தீ!

01/10/2012 22:51

 

டாக்கா: வங்கதேசத்தில் புத்த மதத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் எரிக்கப்பட்ட திருகுரானின் படத்தை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதையடுத்து, அந் நாட்டின் 11 புத்தர் கோவில்களும் 30 புத்த மதத்தினரின் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டன.

தென் கிழக்கு வங்கதேசத்தில் துறைமுக நகரமான சிட்டகாங் அருகேயுள்ள ராமு என்ற நகரில் நள்ளிரவில் இந்தத் தாக்குதல்கள் நடந்ன.

கும்பல் தாக்க வருவதை அறிந்ததும் வீடுகளில் இருந்தவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டதால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த கலவரம் பல மணி நேரம் நடந்தது. போலீசாரால் கலவரக்காரர்களை அடக்க முடியவில்லை. இதையடுத்து எல்லை பாதுகாப்புப் படை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். அதன் பிறகு தான் நிலைமை கட்டுக்குள் அடங்கியது.

தகவல் அறிந்ததும் உள்துறை மந்திரி மகியுதின் கான் ஆலம்கீர் சம்பவம் நடந்த பகுதிகளுக்கு நேரில் சென்றார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, புத்த மதத்தை சேந்தவர்கள் இந்தத் தாக்குதலை கண்டித்து சிட்டகாங் நகரில் மனித சங்கிலி போரட்டம் நடத்தினர்.