மதவாத சக்திகளுக்கு என்றும் இடம் தரமாட்டேன்: கருணாநிதி

05/10/2012 10:06

 

சென்னை: பா.ஜ.கவில் இருக்கும்போது மதவாத சக்திக்கு இடம் தரும் சூழல் ஏற்பட்டபோது உறவை அறுத்துக் கொண்டு வந்த இயக்கம்தான் தி.மு.க. இந்தியாவில், தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு என்றும் இடம் தரமாட்டேன் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

சென்னையில் மணிச்சுடர் நாளிதழின் 25ம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பு மலர் வெளியீட்டு விழா நடந்தது.

விழாவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமை தாங்கினார். அதில் பேசிய கருணாநிதி, 1945ல் ஈரோடு குருகுலத்தில் பெரியார் தொடங்கிய கறுப்புச் சட்டை படையில் நான் சேர்ந்தேன். 1945ல் கறுப்புச் சட்டைக்கு வேலை இருந்தது. இப்போதும் கறுப்புச் சட்டைக்கு வேலை இருக்கிறது என்பதால் கறுப்புச் சட்டை அணிந்திருக்கிறேன். இனி, தினந்தோறும், ஒவ்வொரு நாளும், கறுப்புச் சட்டையை கடைசிவரை அணிவேன். தமிழகத்தின் இழிவு துடைக்கப்படும் வரை, கறுப்புச் சட்டையை அணிவேன்.

முஸ்லிம்களை பொறுத்தவரை அவர்கள் மைனாரிட்டிகள். ஜெயலலிதா கூறுவதுபோல் தி.மு.கவும் மைனாரிட்டிதான். தி.மு.க. மைனாரிட்டி மக்களுக்காக நடக்கும் ஆட்சி என்று சட்டமன்றத்தில் கூறினேன். ஆந்திரா போன்ற மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு கொடுத்தபோது அதை அறிக்கை விட்டு எதிர்த்தவர்கள் யார்?

தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதம் ஒதுக்கீடு என்று நான் சொன்னேன். அதை எதிர்த்தவர்கள் யார், யார்? என்று தெரியும். அதை மறந்திருக்க மாட்டார்கள்.

என்றைக்கும் நாம் மதவாதத்துக்கு இடம் தரக்கூடாது. தி.மு.க. என்றும் மதவாதத்துக்கு இடம் தராது. பா.ஜ.கவில் இருக்கும்போது மதவாத சக்திக்கு இடம் தரும் சூழல் ஏற்பட்டபோது உறவை அறுத்துக் கொண்டு வந்த இயக்கம்தான் தி.மு.க. இந்தியாவில், தமிழகத்தில் மதவாத சக்திகளுக்கு என்றும் இடம் தரமாட்டேன் என்றார்.