மனிதர்களால் நபிகள் நாயகத்தைக் கொல்ல முடியாது...(வரு முன் உரைத்த இஸ்லாம்)

08/11/2012 19:15

32 மனிதர்களால் நபிகள் நாயகத்தைக் கொல்ல முடியாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகத் தலைவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தலைவராகத் திகழ்ந்தார்கள்.
 
பல்லாயிரம் ஆண்டுகள் மக்களிடம் ஊறித் திளைத்த மூட நம்பிக்கைகளைத் தாட்சண்யமில்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்த்தார்கள்.
 
கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் சுரண்டிக் கொழுத்தவர்களையும் ஆள் பலம் பண பலம் காரணமாக பலவீனர்களுக்குக் கொடுமை செய்த வலிமை மிக்க தலைவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூர்க்கமாக எதிர்த்தார்கள்.
 
அனைத்து விதமான தீமைகளையும் எதிர்த்து வீரியத்துடன் பிரச்சாரம் செய்ததால் அதிகமான எதிரிகளையும் சம்பாதித்து வைத்திருந்தார்கள்.
 
'இவரைக் கொன்றொழித்தால் தான் நமக்கு நல்லது' என்று தீயவர்கள் பல சந்தர்ப்பங்களில் திட்டமிடும் அளவுக்கு அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. இதன் காரணமாகவே மக்காவில் இரகசியமாகப் பிரச்சாரம் செய்து வந்தனர். எதிரிகள் அனைவரும் கூட்டுச் சேர்ந்து கொலை செய்யத் திட்டம் தீட்டியதை அறிந்து சொந்த ஊரை விட்டு வெளியேறி மதீனாவுக்கு அடைக்கலம் தேடிச் சென்றார்கள்.
 
மதீனா சென்ற பிறகு அவர்களின் ஆதரவுத் தளம் விரிவடைந்தாலும் அங்கேயும் அவர்களுக்கு எதிரிகள் இருந்தனர். நல்லவர்களைப் போல் நடித்து திட்டம் தீட்டியவர்கள் மதீனாவில் இருந்தனர்.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (எதிரிகள் பற்றிய அச்சம் காரணமாக) தூக்கமில்லாதவர்களாக இருந்தனர். மதீனாவுக்கு வந்த போது 'இரவில் என்னைப் பாதுகாக்கும் நல்லவர் ஒருவர் இல்லையா?' என்று கூறினார்கள். அப்போது ஆயுதத்தின் சப்தத்தை நாங்கள் கேட்டோம். 'யாரது?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். 'நான் தான் ஸஅது பின் அபீ வக்காஸ்; உங்களுக்குக் காவல் காக்க வந்துள்ளேன்' என்று ஆயுதத்திற்கு உரியவர் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நுல் : புகாரி 2885,7231)
 
இரவில் உறக்கம் வராத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிரிகள் பற்றி அச்சம் இருந்தது என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.
 
பத்ருப் போர், உஹதுப் போர், அகழ்ப் போர், கைபர் போர், ஹூனைன் போர் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்பாஸ் (ரலி) உள்ளிட்ட மெய்க்காப்பாளர்கள் இருந்தனர்.
 
இந்த நிலையில் தான் பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.
தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். திருக்குர்ஆன் 5.67
 
சத்திய மார்க்கத்தை அச்சமின்றி எடுத்துச் சொல்லுமாறும், எடுத்துச் சொல்வதால் எதிரிகளால் எந்த ஆபத்தும் நேராமல் காப்பது தன் கடமை என்றும் இறைவன் இவ்வசனத்தில் அறிவிக்கிறான்.
 
இறைவன் இவ்வாறு அறிவித்ததாக ஒருவர் கூறினால் அதன் விளைவு என்ன? இறைவனே பாதுகாப்பதாகக் கூறுவதால் இனி மேல் அவருக்குப் பாதுகாப்பு தேவையில்லை என்பது பொருள். மேலும் தன்னை எவராலும் கொல்ல முடியாது என்று அறை கூவல் விடுகிறார் என்பதும் பொருள்.
 
இந்த உத்தரவாதம் இறைவனிடமிருந்து வந்திருக்காவிட்டால் இப்படி அறிவித்த காரணத்துக்காகவே எதிரிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொலை செய்து 'அவர்கள் இறைத்துதர் அல்ல' என்று நிரூபித்திருப்பார்கள்.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்றாட நடவடிக்கைகளையும், வாழ்க்கை முறைகளையும் ஒருவர் ஆராய்ந்தால் 'உலகிலேயே மிகவும் எளிதாகக் கொல்லப்படத்தக்கவராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்' என்பதை அறிந்து கொள்வார்.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடிசையில் தான் வசித்தார்கள். அந்தக் குடிசைக்கு தாழிடப்படும் வசதியான கதவுகள் கூட இருக்கவில்லை. யார் வேண்டுமானாலும் பட்டப்பகலிலோ, நள்ளிரவிலோ வீட்டுக்குள் புகுந்து அவர்களைக் கொல்ல முடியும் என்ற அளவுக்குப் பலவீனமான நிலையில் இருந்தார்கள்.
 
மேலும் தினசரி ஐந்து நேரமும் பள்ளிவாசலில் வந்து தொழுகை நடத்தி வந்தார்கள். தினமும் குறிப்பிட்ட ஐந்து நேரத்தில் மக்களால் சந்திக்கப்படும் நிலையில் உள்ள ஒருவரைத் தக்க தருணம் பார்த்துக் கொல்வதாக இருந்தால் கொன்று விட முடியும்.
 
மேலும் வெளிப்படையாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறினால் அவரைப் பற்றி எதையும் விசாரிக்காமல் அவரது வாக்கு மூலத்தை நம்பி முஸ்லிம்கள் பட்டியலில் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இணைத்துக் கொள்வார்கள்.
 
உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிவான். நம்மால் வெளிப்படையானதை மட்டும் தான் அறிய முடியும் என்பதைக் கொள்கையாகவே கொண்டிருந்தனர். பள்ளிவாசலுக்கு வரும் யாரும் எந்தச் சோதனைக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்.
 
இதனால் தான் முஸ்லிம்களாக இல்லாமல் முஸ்லிம்களாக நடித்த நயவஞ்சகர்கள் பள்ளிவாசலில் வந்து தொழுவதாக நடித்து வந்தனர். அவர்களில் ஒருவர் கூட தடுக்கப்படவில்லை.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்ல நினைக்கும் ஒருவர் அவர் யாரென்றே அறியப்படாதவராக இருந்தாலும் சாதாரணமாகப் பள்ளிவாசலுக்குள் நுழையலாம். யாரும் கேட்டால் 'நானும் முஸ்லிம் தான்' என்று கூறினால் உள்ளே நுழைய அதுவே போதுமானதாக இருந்தது.
 
அரண்மனையிலும், கோட்டைகளிலும் வாழாமல் எந்த மனிதரும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற நிலையில் அவர்கள் வாழ்ந்திருந்தும் 'நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எவரும் கொல்ல முடியாது' என்று இறைவன் அறிவித்தான்.
 
கொல்லப்படுவதற்கான வழிகளைத் திறந்து வைத்துக் கொண்டு அனைத்து தீமைகளையும் எதிர்த்ததன் மூலம் எதிரிகளின் எண்ணிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகப்படுத்திக் கொண்டு இருந்தும் அவர்களை யாராலும் கொல்ல முடியாது என்று இறைவன் அறிவித்தான். இறைவன் அறிவித்த படியே இயற்கையான முறையில் தமது 63வது வயதில் அவர்கள் மரணம் அடைந்தார்கள்.

33 பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைத்துதர் மூஸா (அலை) அவர்கள் கொடுங்கோல் ஆட்சி செய்த ஃபிர்அவ்னையும், அவனது சமுதாயத்தையும் நல்வழிப்படுத்த இறைத்துதராக நியமிக்கப்பட்டார்கள்.
 
ஆனாலும் அவன் திருந்தவில்லை. ஒன்பது அத்தாட்சிகளை மூஸா நபி அவர்கள் காட்டிய பிறகும் அவன் நம்பிக்கை கொள்ள மறுத்தான். மூஸா நபியையும், அவர்களை ஏற்றுக் கொண்ட மக்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். முடிவில் தமது சமுதாயத்தை அழைத்துக் கொண்டு தப்பித்து மூஸா நபி அவர்கள் நாட்டை விட்டு ஓடினார்கள்.
 
இதைக் கேள்விப்பட்ட ஃபிர்அவ்ன் தனது படையினருடன் அவர்களை விரட்டி வந்தான். எதிரில் கடல்! பின்னால் பிர்அவ்னின் படை! இப்படிச் சிக்கலில் மாட்டிக் கொண்ட மூஸா நபி அவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது கைத்தடியால் கடல் மீது அடித்தார்கள். கடல் இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு பிளவும் ஒரு மலை அளவுக்கு உயரமாக ஆனது.
 
இந்தப் பாதையில் புறப்பட்டு மூஸா நபியும், அவர்களின் சமுதாயமும் மறு கரையை அடைந்தார்கள். அதே பாதையில் விரட்டி வந்த ஃபிர்அவ்னும், அவனது படையினரும் கடலில் மூழ்கடிக்கப்பட்டு அறவே அழிக்கப்பட்டனர்.
 
ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட போது அவனை நோக்கி இறைவன் பின்வருமாறு கூறியதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.
 
இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடக்கச் செய்தோம். ஃபிர்அவ்னும், அவனது படையினரும் அக்கிரமமாகவும், அநியாயமாகவும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். முடிவில் அவன் மூழ்கும் போது 'இஸ்ராயீலின் மக்கள் நம்பியவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என நம்புகிறேன்; நான் முஸ்லிம்' என்று கூறினான். 'இப்போது தானா? (நம்புவாய்!) இதற்கு முன் பாவம் செய்தாய்; குழப்பம் செய்பவனாக இருந்தாய். உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம். (என்று கூறினோம்.)' மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர். திருக்குர்ஆன் 10:90-92
 
கடலில் மூழ்கடிக்கப்பட்டவர்கள் மீன்களுக்கு இறையாவார்கள். அல்லது கரை ஒதுங்கி அழுகிப் போவார்கள் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். ஆனால் ஃபிர்அவ்னின் உடல் அவ்வாறு அழியாது. அது என்னால் பாதுகாக்கப்படும் என்று இறைவன் கூறுவதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலோ, அதைத் தொடர்ந்து பல நுற்றாண்டுகளாகவோ அந்த உடல் எங்கே பாதுகாக்கப்பட்டுள்ளது? எவ்வாறு பாதுகாக்கப்பட்டுள்ளது என்ற விபரம் எதுவும் உலகுக்குத் தெரியவில்லை.
 
அன்றைக்கே அந்த உடலை வெளிப்படுத்தி மக்கள் முன் காட்டியிருந்தால் அந்த உடலைத் தொடர்ந்து பாதுகாத்திருக்க முடியாது. பாதுகாக்கும் வழிமுறைகளை அன்றைய மக்கள் அறிருந்திருக்க வில்லை.
 
எந்தக் காலத்தில் அதை வெளிப்படுத்தினால் மனிதர்கள் அதைப் பாதுகாத்துக் கொள்வார்களோ அந்தக் காலத்தில் 1898ல் அவனது உடல் பணிப்பாறைகளுக்கு இடையே கண்டு பிடிக்கப்பட்டு எகிப்தின் தலை நகரம் கொய்ரோவில் உள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த உடலின் வயதை அறிய கார்பன் சோதனை உள்ளிட்ட அனைத்துச் சோதனைகளும் செய்து 'இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய உடல்' என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.



  இஸ்லாம் மேலோங்கும் என்ற முன்னறிவிப்பு


 

Play Without Downloading 
 Download To your computer
மொபைல் வீடியோ
ஆடியோ