ராமநாதபுரம் அருகே 6 பேர் உயிருடன் எரிப்பு கொலைக்கான காரணம் என்ன?

02/10/2012 09:34

மண்டபம் : மீனவர் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேரை வீட்டோடு தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொலைக்கான காரணம் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. கொலை நடந்த கிராமத்தில் பதற்றம் நிலவு வதால் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மனதை உருக்கிய பிஞ்சுக் குழந்தை

குடிசை வீட்டின் கதவை வெளியே பூட்டிவிட்டு கொலைகார கும்பல் தீ வைத்ததால், குடிசை தீப் பற்றி எரிந்தது. குடிசை வீட்டின், பின்புறக் கதவு அருகே, ஒரு வயது குழந்தை சக்தியின் உடல் சாய்ந்த நிலையில் கருகிக் கிடந்தது. தீயின் கொடுமை தாங்காமல் கதறி அழுதபடியே தவழ்ந்து சென்று கதவு அருகே அந்தக் குழந்தை போராடி இறந்திருந்தது தெரிந்தது. இந்தக் காட்சி பார்த்தவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

இந்த கொடூர கொலை குறித்து தகவல் அறிந்ததும் டிஐஜி ராமசுப்ரமணியன் தலைமையில், ராமேஸ்வரம் டிஎஸ்பி மணிவண்ணன் மற்றும் உச்சிப்புளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எரித்துக் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

உடல்கள் தகனம்

கொடுரமான முறையில் எரித்துக் கொல்லப்பட்டு, கரிக்கட்டைகளாக கிடந்த 6 பேரின் உடல்களையும் ராமநாதபுரம் அரசு டாக்டர்கள் பால்ராஜ், ஷேக் அப்துல்லா தலைமையில் மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர். உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட உடல்கள் கள்ளழகர் வீடு அருகே தகனம் செய்யப்பட்டன. விவரமறியாத குழந்தைகள் உள்பட ஆறு பேர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம், இப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலைக்கு காரணம்?

துபாயில் வேலை பார்க்கும் கள்ளழகருக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் தோப்புவலசை கிராமத்தில் உள்ளது. இதே பகுதியில் கள்ளழகர் உறவினர்களுக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தை ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராயர் மகன் லூயிஸ்ராஜ், ஜாபர்கனி ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வாங்கினர். அந்த நிலத்தை பிளாட் போடுவதற்கு கள்ளழகரின் ஒரு ஏக்கர் நிலம் தடையாக இருந்தது. இதனால், அந்த ஒரு ஏக்கர் நிலத்தை தங்களிடம் விலைக்கு கொடுத்து விடுமாறு கள்ளழகரிடம், லூயிஸ்ராஜ், ஜாபர் கனி தரப்பினர் கேட்டனர்.

ஆனால், கள்ளழகர் மறுக்கவே இருதரப்பு இடையே விரோதம் ஏற்பட்டது. இது தொடர்பாக இரு தரப்பினரும் உச்சிப்புளி போலீசில் ஓராண்டுக்கு முன்பே ஒருவர் மீது ஒருவர் புகார் கொடுத்துள்ளனர். ராமநாதபுரம் ஆர்டிஓ கோர்ட்டிலும் விசாரணை நடந்து வருகிறது. பிரச்னைக்குரிய நிலத்தில் கள்ளழகர் குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வந்தனர். நிலத்தை காலி செய்யுமாறு 3 மாதங்களுக்கு முன் கள்ளழகர் மனைவி காளிமுத்து மற்றும் பக்கத்து நிலத்தைச் சேர்ந்த முனியாண்டியை லூயிஸ்ராஜ் ஆதரவாளர்கள் மிரட்டிச் சென்றனர்.

இந்த முன்விரோதத்தில் லூயிஸ்ராஜ் உள்பட அவரது தரப்பைச் சேர்ந்த 4 பேர் கள்ளழகர் குடும்பத்தினரை எரித்துக் கொலை செய்திருக்கலாம் என காளிமுத்துவின் தங்கை கணவர் கருணாநிதி போலீசில் புகார் கொடுத்தார். சம்பவம் நடந்த வீட்டின் வெளிப்புறம் பூட்டப்பட்டு இருந்ததால், ஆறு பேரும் எரித்துத்தான் கொலை செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்ற கோணத்தில் விசாரணையை துவக்கிய போலீசார், கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீசார் தப்பினர்

பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, வீட்டின் அருகிலேயே ஆறு பேரின் உடல்களையும் தகனம் செய்வதற்காக கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் விறகுகளை அடுக்கிக் கொண்டிருந்தனர். விறகுகளின் மீது சிலர் பெட்ரோல் ஊற்றினர். அப்போது, அதை கவனிக்காமல் அங்கிருந்த ஒரு வாலிபர் திடீரென தீயை பற்றவைத்தார். இதனால், குபீரென தீப்பற்றி குபுகுபுவென எரிந்தது. இதனால் பதறிப் போன போலீசார் மற்றும் பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயமில்லை.

எரித்து கொல்வோம் என எச்சரித்தார்கள்

எரித்துக் கொல்லப்பட்ட கருப்பையாவின் மனைவி ராஜம்மாள் (55) கதறி அழுதபடி கூறியதாவது: நானும், எனது கணவரும் மகள் காளிமுத்து குடும்பத்துக்கு பாதுகாப்பாக பெரும்பாலும் இந்த வீட்டில்தான் தங்கியிருப்போம். உடல் நலம் சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று விட்டு நான் துட்டிவலசையில் உள்ள எனது வீட்டுக்குச் சென்று விட்டேன். ஒரே நாளில் எனது கணவர், மகள் மற்றும் பேரக் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்டிருப்பது கொடூரமானது. 

மூன்று மாதங்களுக்கு முன்பு நில புரோக்கர்களான, லூயிஸ்ராஜ் தரப்பைச் சேர்ந்த வெள்ளிமாசிவலசையைச் சேர்ந்த முனியாண்டி, கல்கிணற்றுவலசையைச் சேர்ந்த காளிமுத்தன் ஆகியோர் சொத்து பிரச்னையில் எனது மகளை, வீட்டோடு பெட்ரோல் ஊற்றி கொளுத்தி விடுவோம் என மிரட்டிச் சென்றனர். எந்தப் பிரச்னையாக இருந்தாலும், கணவர் வெளிநாட்டில் இருந்து வந்ததும் பேசிக் கொள்ளலாம் என எனது மகள் தெரிவித்தார். ஈவு, இரக்கமின்றி பிஞ்சுக் குழந்தைகளைக் கூட எரித்துக் கொன்றிருக்கிறார்கள். போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,‘ இவ்வாறு கூறி கதறி அழுதார்.