ராமநாதபுரம் அருகே தோப்பில் கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள்: செல்போன்-லேப்டாப்கள் பறிமுதல்

26/06/2012 09:43
ராமநாதபுரம் அருகே தோப்பில் கராத்தே பயிற்சியில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்கள்: செல்போன்-லேப்டாப்கள் பறிமுதல்
 
ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கடலோர கிராமத்தில் உள்ள மரைக்காயர் நகர் பண்ணைக்கரை தோப்பு பகுதியில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் சந்தேகப்படும் வகையில் பல்வேறு பயிற்சிகளில் ஈடுபடுவதாகவும், பலருக்கு பயிற்சி அளிப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

இதைத்தொடர்ந்து ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணி, போலீஸ் சூப்பிரண்டு காளிராஜ் மகேஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில் போலீஸ்படை விரைந்து சென்றது. 

அங்கு கடற்கரையையொட்டி உள்ள பாத்திமா தோப்பு பகுதியில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அங்கு வெளிமாநிலங்களை சேர்ந்த நபர்கள் தங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். 

இதுதவிர அவர்கள் தங்குவதற்கு அங்கு கூடாரம் அமைத்து இருந்தனர். மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவர்கள் தங்கி இருந்த கூடாரத்துக்கு ஜெனரேட்டர் மூலம் மின்சப்ளை செய்யப்பட்டு இருந்தது. 

இதுபோன்ற நடவடிக்கைகள் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின. தொடர்ந்து அவர்களிடம் விசாரித்ததில் அசாம், பீகார், கர்நாடகம், கேரளா ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 

அசாமை சேர்ந்த 8 பேர், பீகாரைச் சேர்ந்த 11 பேர், கர்நாடகத்தை சேர்ந்த 2 பேர், கேரளாவை சேர்ந்த ஒருவர் என அங்கு முகாமிட்டு இருந்த 22 பேரையும், பெரியபட்டினத்தை சேர்ந்த 8 பேரையும் போலீசார் வேனில் ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு அவர்களிடம் நுண்ணறிவு பிரிவு, கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

பிடிபட்டவர்களிடம் இருந்து செல்போன், லேப்டாப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றை போலீசார் பரிசோதித்து வருகின்றனர். விசாரணையில் இவர்கள் ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் என்பதும் இந்தியா முழுவதும் உள்ள அந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தேகப்பயிற்சி அளிப்பதாகவும், இதற்காக கடந்த 21-ந்தேதி பெரியபட்டினத்துக்கு வந்ததாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

கடந்த 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை 5 நாட்கள் இந்த பயிற்சி நடக்க இருந்ததாகவும் இதில் யோகா, கராத்தே, தேக ஆரோக்கியம் தொடர்பான பல்வேறு உடற்பயிற்சிகள் அளித்து உடலும் உள்ளமும் வலிமை அடைய பயிற்சி அளிப்பதாக தெரிவித்ததாக போலீசார் கூறினர். 

பிடிபட்ட வடமாநிலங்களை சேர்ந்தவர்களை போலீசார் புகைப்படம் எடுத்தனர். அவர்களிடம் இருந்து கைரேகைகளும் பதிவு செய்யப்பட்டன. இரவு 8.30 மணியளவில் விசாரணைக்குப்பின் அவர்கள் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.

https://www.maalaimalar.com/2012/06/26125458/ramanathapuram-garden-karate-t.html