6. புனித பவுல் (கி.பி.4 - கி.பி.64)

6. புனித பவுல் (கி.பி.4 - கி.பி.64)

6. புனித பவுல் (கி.பி.4 - கி.பி.64)

திருத்தொண்டரான பவுல் கிறிஸ்து பெருமானின் காலத்தில் வாழ்ந்தவர். அவரைவிட இளையவர். புதிய கிறிஸ்துவ சமயத்தைப் பரப்புவதில் முன்னணியில் இருந்தவர். பிற கிறிஸ்துவ எழுத்தாளரையும் சிந்தைனையாளரையும்விட இவரே கிறிஸ்துவ இறையியலில் நிலையான, மிகப் பரந்த விளைவுகளை ஏற்படுத்தியவராவார்.

சவுல் என்றும் பெயர் பெற்ற பவுல் சைலீசியாவிலுள்ள (இன்றைய துருக்கி) டார்சஸ் நகரில் கிறிஸ்துவ ஊழியின் தொடக்க ஆண்டுகளில் பிறந்தார். அவர் ரோமானிய குடிமகனாக இருந்த போதிலும், யூத குலத்தில் பிறந்தவராவார். இளமையில் எபிரேய மொழி கற்று, யூத கல்வியறிவில் நன்கு தேர்ச்சி பெற்றார். கூடாரம் அமைக்கும் தொழிலையும் கற்றார். புகழ்மிகு யூத ஆசிரியரான ராபிகாமாலியலிடம் பயில்வதற்காக இளைஞரான அவர் ஜெரூசலம் சென்றார். கிறிஸ்து பெருமான் வாழ்ந்த காலத்திலேயே பவுலும் ஜெரூசலத்தில் இருந்தபோதிலும், இருவரும் சந்தித்தனரா என்பது ஐயத்திற்கிடமாகும்.

கிறிஸ்து பெருமானின் மறைவுக்குப் பிறகு, தொடக்க காலக் கிறிஸ்துவர்கள் சமய எதிரிகளாகக் கருதப்பட்டதால், அடக்குமுறைக்கு ஆளாயினர். கொஞ்ச காலம் பவுலே இந்த அடக்குமுறையில் பங்கு பெற்று வந்தார். ஆயினும், அவர் டமாஸ்கஸ் நகருக்குச் செல்லும்போது ஒரு காட்சியை கண்டார். அதில் ஏசு கிறிஸ்து அவருடன் பேசவே (?) அவர் புதிய சமயத்தைத் தழுவினார். அதுவே அவருடைய வாழ்க்கையில் திருப்பமாக மாறியது. ஒரு காலம் கிறிஸ்துவ சமயத்தை எதிர்த்தவர். இப்போது அப்புதிய சமயத்தை மிகுந்த ஆர்வமுடன் ஆற்றலுடன் பரப்பத் தொடங்கினார்.

பவுல் தமது எஞ்சிய வாழ்க்கையைக் கிறிஸ்துவ சமயத்தைப் பற்றி சிந்தித்து எழுதுவதிலும், அப்புதிய சமயத்திற்கு மக்களின் மனத்தை மாற்றுவதிலும் கழித்தார். அவர் சமயத்தைப் பரப்பி வந்த காலத்தில் ஆசிய மைனர், கிரீஸ், பாலஸ்தீனம் ஆகிய பகுதிகளில் பரவலாகப் பயணம் செய்து வந்தார். பிற முற்காலக் கிறிஸ்துவர்கள் சிலரைப் போல் பவுல் கிறிஸ்துவ சமயத்தை யூதர்களுக்குப் போதிப்பதிலும் வெற்றி பெறவில்லை. அவர் போதித்த முறை எதிர்ப்பைக் கிளறியது. பலமுறை அவரது உயிருக்கே இடர் ஏற்பட்டது. ஆயினும் யூதரல்லாத பிறருக்குப் போதிப்பதில் பவுல் மாபெரும் வெற்றி பெற்றார். ஆகவே அவரை பெரும் பாலும் இனத்தில் திருத்தூதர் என்பர். கிறிஸ்து மறையைப் பரப்புவதில் அவரைப் போல் பெரும் பங்கு யாரும் பெற்றதே இல்லை. ரோமானியப் பேரரசின் கிழக்குப் பகுதியில் சமயம் பரப்புவதற்காக மூன்று முறை பயணம் செய்த பின் பவுல் ஜெரூசலம் திரும்பினார். அங்கு அவர் சிறைப்பட்டார். ஆயினும் நீதி விசாரணைக்காக ரோமிற்கு அனுப்பப்பட்டார். அவ்விசாரணை எவ்வாறு முடிந்ததென்பதோ, அவர் ரோமை விட்டு வெளியேறினாரா என்பதோ தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் பிறகு (ஏறக்குறைய கி.பி. 64 இல்) ரோம் அருகில் தலை வெட்டப்பட்டார்.

கிறிஸ்துவ மறை வளர்ச்சிக்கு பவுல் ஆற்றிய பெருந்தொண்டு மூன்று வகைப்படும். 1. சமயம் பரப்புவதில் அவர் பெற்ற பெரும் வெற்றி 2. புதிய ஏற்பாட்டின் முக்கிய பகுதியாக விளங்கும் அவருடைய எழுத்தோவியங்கள் 3. கிறிஸ்துவ இறையியல் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பணி.

புதிய ஏற்பாட்டிலுள்ள 27 பகுதிகளில் 14 பவுல் எழுதியதாகக் கருதப்படுகின்றன. இவற்றுள் 4 அல்லது 5 பகுதிகளைப் பிறர் எழுதியதாக இக்கால அறிஞர்கள் கருதிய போதிலும் புதிய ஏற்பாட்டை எழுதியவர்களுள் பவுலே மிக முக்கியமான ஒருவராவார் என்பது தெளிவாகிறது.

கிறிஸ்துவ இறையியலுக்குப் பவுல் ஆற்றிய பணி அளவிடற்கரியது. அவருடைய கருத்துகளுள் சில, கிறிஸ்து நாதர் இறையுணர்வு பெற்ற இறைவாக்கினரான வெறும் மனிதர் மட்டுமல்லாமல், உண்மையான தேவனுமாவார். கிறிஸ்து நாதர் நம் பாவங்களுக்காக உயிர் துறந்தார். அவர் பட்ட வேதனைகள் நமக்கு மீட்பளிக்கும், விவிலியக் கட்டளைக்கேற்ப நடக்க முயன்றால் மட்டும் மனிதன் ஈடேற்றம் பெற முடியாது. அதற்கு அவன் கிறிஸ்துவை ஏற்க வேண்டும். ஒருவன் கிறிஸ்துவை ஏற்பான் எனில் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும். பவுல் பிறப்புத் தீவினை எனும் கோட்பாட்டையும் விளக்கினார். (ரோமானியருக்கு எழுதிய திருமுகம் 5: 12 - 9 -ஐப் பார்க்கவும்.)

கட்டளைகளுக்குப் பணிவதால் மட்டும் மீட்பைப் பெற முடியாதாகையால் புதிதாக கிறிஸ்து மறையைத் தழுவியவர்கள் யூதரின் உணவுக் கட்டுப்பாடுகளையோ, மோசஸ் வகுத்த வழிபாட்டு விதிகளையோ, சுன்னத்து முறையையோ ஏற்கத் தேவையில்லை என்று பவுல் வலியுறுத்தினார். இதைப் பொறுத்தவரையில் புற முற்கால கிறிஸ்துவ தலைவர்கள் பவுலின் கருத்தை ஏற்க மறுத்தனர். அவர்களுடைய கருத்து நிலைபெற்றிருக்குமானால் கிறிஸ்துவ மறை ரோமானியப் பேரரசு முழுதும் அவ்வளவு விரைவாகப் பரவியிருக்குமா என்பது ஐயம்.

பவுல் மணமாகாதவர். பெண்ணுடன் உடலுறவு கொள்ளாதவரெனத் தெரிகின்றது. பாலினம், மகளிர் பற்றி அவர் கூறியவை திருமறை நூலில் சேர்க்கப்பட்டு விட்டமையால், அவை பிற்கால நோக்குகளைப் பெரிதும் பாதித்தன. இது பற்றி அவர் கூறிய முக்கிய கருத்து (கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகம் 7 : - 9 ) மணமாகாதவர்களுக்கும் கைம்பெண்களுக்கும் நான் சொல்வது, நான் இருப்பது போல் அவர்களும் இருந்து விடுவது நல்லது. ஆனால் ஆசையை அடக்க இயலாமற்போனால் திருமணம் செய்துக் கொள்ளட்டும். ஏனெனில், காமத்தால் தீய்வதை விடத் திருமணம் செய்து கொள்வதே மேலானது.

மகளிரின் நிலைப் பற்றியும் பவுல் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தார். பெண்கள் பேசாமல் தாழ்மையோடு அறிவுரை ஏற்க வேண்டும். பெண்கள் கற்பிக்கவோ, ஆண்கள் மது அதிகாரம் செலுத்தவோ நான் விடமாட்டேன். அவர்கள் பேசலாகாது. ஏனெனில் முதலில் படைக்கப்பட்டவன் ஆதாம்; பிறகுதான் ஏவாள் (திமோத்தியுக்கு எழுதிய திருமுகம் 2: 11 - 3). கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் (11: 7- 9) இது போன்ற கருத்தை மிக வன்மையாகக் கூறுகிறார். இப்பகுதிகளில் பவுல் தமது காலத்தவர் பலர் நம்பியிருந்த கருத்துகளையே எடுத்துரைக்கிறார் என்பதில் ஐயமில்லை. ஆயினும் கிறிஸ்து பெருமான் இத்தகைய கருத்துகளைக் கூறியதாக தெரியவில்லை.

கிறிஸ்துவ மறை ஒரு யூத சமயப் பிரிவினின்று உலக மறையாக மாறியதற்கு பவுலே முக்கியக் காரணமாவார். கிறிஸ்து இறைவன், அவரை ஏற்பதன் மூலமே ஈடேற்றம் பெற முடியும் என்று அவர் போதித்த முக்கிய கருத்துகள் இடைப்பட்ட எல்லா நூற்றாண்டுகளிலும் கிறிஸ்து மறையின் அடிப்படைக் கோட்பாடாக இருந்து வந்துள்ளன. பிற்காலத்தில் வந்த அகஸ்டின் அக்குயினாஸ், லூத்தர், கால்வின் போன்ற எல்லா கிறிஸ்துவ இறையியலாரையும் அவருடைய கருத்துகள் கவர்ந்தன. அவருடைய கருத்துகள் கவர்ந்தன. அவருடைய கருத்துகள் எவ்வளவு விளைவுகளை ஏற்படுத்தினவென்றால், சில அறிஞர்கள் ஏசு கிறிஸ்துவைவிட பவுலையே கிறிஸ்து மறையை நிறுவியவருள் முதன்மையானவர் எனக் கருதுகின்றனர். இந்நோக்கு மிகத் தீவிரமானதாகத் தோன்றுகிறது. ஆயினும், பவுல் ஏசு கிறிஸ்துவுக்கு இணையில்லை யெனினும், பிற கிறிஸ்துவ மறைச் சிந்தனையாளர் எவரையும் மிகுதியான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளார்.