7. சாய் லுன் (கி.பி. 50 - 121)

7. சாய் லுன் (கி.பி. 50 - 121)

7. சாய் லுன் (கி.பி. 50 - 121)

காகிதத்தைக் கண்டுபிடித்தவர் சாய் லுன் (Ts'ai Lun) ஆவார். இவருடைய பெயரை அறிந்தவர்கள் மிகக் குறைவே. இவருடைய கண்டுபிடிப்பின் முக்கியத்துவத்தைக் கருதுகையில் மேனாடுகளில் இவர் எந்த அளவுக்குப் புறக்கணிக்கப் பட்டிருக்கிறார் என்பதை அறியும் போது நமக்கு வியப்பு ஏற்படுகிறது. மேனாடுகளில் எத்தனையோ, பெரிய கலைக் களஞ்சியங்கள் வெளிவந்துள்ளன. ஆனால், அவற்றில் சாய் லுன் பற்றி ஒரு சிறு குறிப்பு கூட இல்லை. வரலாற்றுப் பாட நூல்களில் கூட இவருடைய பெயர் காணப்படவில்லை. காகிதத்தின் முக்கியத்துவத்தைக் கவனத்திற் கொள்ளும் போது, சாய் லுன் பற்றிய குறிப்புகள் இல்லாமையால், அவருடைய பெயரை ஒரு கற்பனைப் பெயர் தானோ என்ற ஐயம் எழலாம். எனினும், கவனமான ஆராய்ச்சிகளிலிருந்து சாய் லுன் என்பவர் உண்மையான ஆள் தான் என்பதும், அவர் žனப் பேரரசரின் அரசவையின் ஓர் அதிகாரியாகப் பணிபுரிந்தார் என்பது, அவர் தாம் தயாரித்த காகிதத்தின் மாதிரிகளை பேரரசர் ஹோ-டியினிடம் கி.பி. 105 ஆம் ஆண்டுவாக்கில் அளித்தார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஹான் அரச மரபின் அகராதி முறை வரலாற்றில் சாய் லுன் கண்டுபிடிப்பு பற்றிக் கூறப்பட்டிருக்கிறது. இந்தச் செய்தி நம்பக் கூடியதாகவே உள்ளது. இதில் மந்திர தந்திரச் செயல்களோ புராண அற்புதங்களோ எதுவுமில்லை. காகிதத்தைக் கண்டு பிடித்தவர் சாய் லுன் தான் என்றே சீன வரலாறு திட்ட வட்டமாகக் கூறுகிறது. இச்சாதனைக்காகச் சீனாவில் அவர் பெரிதும் போற்றப்பட்டார்.

எனினும், சாய் லுன் வாழ்க்கை குறித்து அதிகமான விவரங்கள் கிடைக்கவில்லை. அவர் ஓர் அலியாக இருந்தார் என சீனத்துச் சான்றுகள் கூறுகின்றன. சாய் லுன்னின் கண்டுபிடிப்பு குறித்துச் சீனப் பேரரசர் பெரும் மகிழ்ச்சி கொண்டார் என்றும் ஆவணச் சான்றுகள் குறிக்கின்றன. இந்தக் கண்டுபிடிப்புக்கே, சாய் லுன்னுக்குப் பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அவர் பணக்காரராகவும் ஆனார். ஆனால், பின்னர் அவர் அரண்மனைச் சூழ்ச்சி யொன்றில் சிக்கிக் கொண்டார். அதன் விளைவாக அவருடைய செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது. அவதிக்குள்ளாகிய சாய் லுன், நீராடி அலங்கார ஆடைகள் அணிந்து, நஞ்சுண்டு மாண்டார் எனச் சீனச் சான்றுகள் கூறுகின்றன.

சீனாவில் இரண்டாம் நூற்றாண்டின் போது காகிதம் பெருமளவுக்குப் பயனுக்கு வந்தது. அடுத்த சில நூற்றாண்டுகளில், சீனாவிலிருந்து மற்ற ஆசிய நாடுகளுக்கு காகிதம் ஏற்றுமதி செய்யப்பட்டது. காகிதம் தயாரிக்கும் உத்தியைச் சீனர்கள் நீண்ட காலம் இரகசியமாகவே வைத்திருந்தார்கள். ஆனால், கி.பி. 751 இல் சீனக் காகிதத் தயாரிப்பாளர்கள் சிலரை அராபியர்கள் பிடித்துச் சென்றனர். அதன் பின் சில ஆண்டுகளிலேயே சமர்கண்டிலும், பாக்தாதிலும் காகிதம் தயாரிக்கப்படலாயிற்று, காகிதம் தயாரிக்கும் கலை படிப்படியாக அரபு உலகம் முழுவதிலும் பரவியது. ஐரோப்பியர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இந்தக் கலையை அராபியர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர். காகிதத்தில் பயன்பாடு உலகெங்கும் படிப்படியாகப் பரவியது.

நவீன அச்சுக் கலையைக் கூட்டன்பர்க் கண்டுபிடித்த பின்னர், மேனாடுகளில் ஆட்டுத் தோலுக்குப் பதிலாகக் காகிதம் முக்கிய எழுது பொருளாகப் பயன்படலாயிற்று. இன்று எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. சீனாவில், சாய் லுன்னுக்கு முன்பு, பெரும்பாலான நூல்கள் மிகக் கனமாகவும், அலங்கோலமாகவும் இருந்தன. சில நூல்கள் பட்டுத் துகிலில் எழுதப்பட்டன. ஆனால், அந்த நூல்களுக்கு மிகுந்த செலவு பிடித்தது. மேனாடுகளில், காகிதம் கண்டு பிடிக்கப்படுவதற்கு முன்னர், பெரும்பாலான நூல்கள் ஆட்டுத் தோலில் அல்லது கன்றின் தோலில் எழுதப்பட்டன.

இதற்காக தோல் ஒரு தனி வகை செய்முறையின்படி பக்குவப் படுத்தப்பட்டது. அதற்கு முன்பு, கிரேக்கர்களும், ரோமானியர்களும், எகிப்தியர்களும் கோரையின் நாணற்புல் வகையிலிருந்து தயாரிக்கப்பட்ட 'பப்ரைஸ்' என்ற தாளில் நூல்களை எழுதி வந்தனர். இந்தத் தாளில் நூல்களை எழுதுவது மிகக் கடினமாக இருந்ததுடன், இதைத் தயாரிப்பதற்கு மிகுந்த செலவாகியது. எனவே, இந்தத் தாளுக்குப் பதிலாக ஆட்டுத் தோலும், கன்றுத் தோலும் எழுது பொருளாகப் பயன்படுத்தப்பட்டன.

இன்று நூல்களும், மற்ற எழுத்துச் சுவடிகளும் மலிவாகவும், மிகப் பெருமளவிலும் தயாரிக்கப் படுகின்றன என்றால், அதற்குக் காகிதம் பயனுக்கு வந்ததே தலையாய காரணமாகும். அச்சு எந்திரம் கண்டுபிடிக்கப் படாதிருந்தால், காகிதத்திற்கு இன்றுள்ள அளவுக்கு பெரும் முக்கியத்துவம் ஏற்பட்டிருக்காது என்பது உண்மைதான். ஆயினும், அச்சடிப்பதற்கு காகிதம் போன்ற மலிவான எழுது பொருள் பெருமளவில் கிடைக்காது போயிருப்பின், அச்சு எந்திரத்திற்கு அத்துணை முக்கியத்துவம் ஏற்பட்டிருக்காது என்ற உண்மையையும் ஒப்புக் கொள்ள வேண்டும்.

அப்படியானால், சாய் லுன், கூட்டன்பர்க் ஆகிய இருவரில் யாருக்கு முதலிடம் அளிக்க வேண்டும்? இந்த இருவருமே சரிநிகரான முக்கியத்துவமுடையவர்கள் என நான் கருதிய போதிலும் சாய் லுன்னுக்குச் சற்றே உயர்ந்த இடம் அளிக்க விரும்புகிறேன். அதற்குக் காரணங்களும் உண்டு.

1. எழுது பொருளாக மட்டுமின்றி, வேறு பல பயன்பாடுகளும் காகிதத்திற்கு உண்டு. உண்மையைக் கூறின், இன்று தயாரிக்கப்படும் காகிதத்தில் பெரும் பகுதி அச்சிடுதல் அல்லது வேறு நோக்கங்களுக்காகவே பயன் படுத்தப்படுகிறது.

2. கூட்டன்பர்க்குக்கு முன்னர் வாழ்ந்தவர் சாய் லுன். ஏற்கனவே காகிதம் கண்டுபிடிக்கப் பட்டுப் பயனுக்குவராமற் போயிருப்பின் கூட்டன்பர்க் அச்சுக் கலையைக் கண்டுபிடிக்க இயலாமற் போயிருக்கலாம்.

3. காகிதம், நவீன அச்சுக் கலை ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்று மட்டுமே கண்டுபிடிக்கப் பட்டிருக்குமானால், இயங்கும் எழுத்துரு, ஆட்டுத் தோல் ஆகிய இரண்டின் கூட்டிணைவினால் அல்லாமலும் கூட்டன்பர்க்குக்கு நெடுங்காலத்திற்கு முன்பே அறியப்பட்டிருந்த அச்சுப்பாள அச்சு முறை, காகிதம் ஆகிய இரண்டின் கூட்டிணைவு மூலமாக அதிகமான நூல்களை அச்சிட்டிருக்க, முடியும்.

உலகில் வாழ்ந்த மிகச் செல்வாக்கு மிக்க பத்துப் பெரியவர்களில் கூட்டன்பர்க், சாய் லுன் இருவரையும் சேர்ப்பது பொருத்தமாக இருக்குமா? காகிதம், அச்சுக் கலை ஆகிய கண்டுபிடிப்புகளின் முழு முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொள்வதற்கு, சீனாவிலும், மேலை நாடுகளிலும் ஏற்பட்ட பண்பாட்டு முன்னேற்றத்தை ஒப்பு நோக்குவது அவசியமாகும். இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் சீன நாகரிகம், மேலை நாட்டு நாகரிகத்தை விட வளர்ச்சி குன்றியதாகவே இருந்து வந்தது. முதல் ஆயிரம் ஆண்டுகளின் போது, மேலைநாடுகளை விட சீனா விரைவாக முன்னேற்றமடைந்தது. ஏறத்தாழ 700 அல்லது 800 ஆண்டுகள் வரை உலகில் சீன நாகரிகம் தான் மிகவும் முன்னேறிய நாகரிகமாகத் திகழ்ந்தது. ஆயினும், 15 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர், மேற்கு ஐரோப்பா சீனாவை விட மிக அதிக முன்னேற்றமடைந்தது. இந்த மாறுதல்களுக்குப் பல்வேறு பண்பாட்டு விளக்கங்கள் கூறப்பட்டுள்ளன. எனினும், அந்த விளக்கங்களில் பெரும்பாலானவை நான் கருதும் மிக எளிமையான விளக்கத்தைப் புறக்கணித்து விட்டன.

வேளாண்மையும் எழுத்து முறையும் சீனாவை விட மத்திய கிழக்கில் முன்னதாகவே முன்னேற்றமடைந்தது உண்மைதான். ஆனால், மேலை நாட்டு நாகரிகத்தை விடச் சீன நாகரிகம் பின் தங்கியதற்கு இதை மட்டும் காரணமாகக் கூற முடியாது. இதற்கு முக்கிய காரணம் சாய்லுன்னுக்கு முன்பு வரை, சீனாவில் வசதியான எழுது பொருள் எதுவும் இல்லாமலிருந்தது தான் என நான் கருதுகிறேன். மேலை நாடுகளில், 'பப்ரைஸ்' என்ற எழுது பொருளில் குறைபாடுகள் இருந்த போதிலும் பப்ரைஸ் நூல்கள், மரத்தினால் அல்லது மூங்கிலால் ஆக்கப்பட்ட நூல்களை விட மிகவும் உயர்தரமாக இருந்தன. பொருத்தமான எழுது பொருள் இல்லாதிருந்தது சீனப் பண்பாட்டு முன்னேற்றத்திற்குப் பெருந்தடங்கலாக அமைந்தது. ஒரு சீன அறிஞர் தமக்கு ஓரளவுக்குத் தேவையான நூல்களை எடுத்துச் செல்வதாக இருந்தால் கூட, அவற்றை ஒரு பார வண்டியில் ஏற்றிச் செல்ல வேண்டியிருந்தது. இந்த அடிப்படையில், ஓர் அரசின் நிருவாகத்தை நடத்துவது எத்துணை கடினமாக இருந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

எனினும், காகிதத்தை சாய் லுன் கண்டுபிடித்ததை யொட்டி நிலைமை அடியோடு மாறியது. இப்பொழுது பொருத்தமான எழுது பொருள் கிடைத்து விட்டமையால், சீன நாகரிகம் மிகத் துரிதமாக முன்னேறியது. மிகச் சில நூற்றாண்டுகளிலேயே அது மேலை நாடுகளுக்கு இணையாக வளர்ச்சியடைந்தது. மேலை நாடுகளில் காணப்பட்ட அரசியல் வேற்றுமை இதற்கு ஒரு காரணமாக இருந்ததெனினும், அதுவே முழுக் காரணம் என்று சொல்ல முடியாது. நான்காம் நூற்றாண்டில், மேலை நாடுகளை விடச் சீனாவில், அரசியல் வேற்றுமை அதிகமாக நிலவயது. ஆயினும், அங்கு பண்பாட்டு வளர்ச்சி ஏற்பட்டுக் கொண்டுதான் இருந்தது. அடுத்து வந்த நூற்றாண்டுகளில், மேலை நாடுகளில் முன்னேற்றம் மிகவும் மந்தமடைந்திருந்த அதே சமயத்தில், சீனாவில், திசைகாட்டி, துப்பாக்கி மருந்து, அச்சுப்பாள அச்சு முறை ஆகியவை கண்டுபிடிக்கப் பட்டன. ஆட்டுத் தோலைவிடக் காகிதம் மலிவாக இருந்தமையாலும, அது பெருமளவில் கிடைத்தமையாலும், மேலை நாடுகளை விடச் சீனா விரைவாக வளர்ச்சியடைந்தது.

மேலை நாடுகள் காகிதத்தைப் பயன்படுத்தத் தொடங்கிய பின்பு, அவை வளர்ச்சி வேகத்தில் சீனாவை விஞ்சின. எனினும், 18 ஆம் நூற்றாண்டில் கூட ஐரோப்பாவை விட சீனா அதிகச் செல்வச் செழிப்புடன் திகழ்ந்தது என்பதை மார்க்கோபோலோவின் எழுத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன.

அப்படியிருந்தும், சீனா மேலை நாடுகளுக்குப் பின் தங்கியதேன்? இதற்குப் பல சிக்கலான பண்பாட்டுக் காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், தொழில் நுட்பக் காரணம் ஒன்றை மட்டும் சொன்னாலே இதற்குப் போதுமானதாகும். பதினைந்தாம் நூற்றாண்டு ஐரோப்பாவில் ஜோஹான் கூட்டன்பர்க் என்ற அறிஞர் தோன்றி , ஒரே சமயத்தில் நூல்களின் ஏராளமான படிகளை அச்சிடுவதற்கான ஓர் உத்தியைக் கண்டுபிடித்தார். அதன் பின்பு, ஐரோப்பிய பண்பாடு மிக விரைவாக முன்னேறியது. சீனாவில் ஒரு கூட்டன்பர்க் தோன்றாமற் போனதால், சீனர்கள் அச்சுப் பாள அச்சுமுறையுடன் நின்று விட்டனர். அவர்களுடைய முன்னேற்றம் மந்தகதியிலேயே நடந்தது.

மேற்சொன்ன முடிவினை ஏற்றுக் கொள்வதாயின் மனித குல வரலாற்றில் சாய் லுன், கூட்டன்பர்க் இருவரும் தலையாயவர்கள் என்ற முடிவினையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். வேறொரு காரணத்தினாலும், மற்ற அனைத்துப் புத்தமைப்பாளர்களையும் விட சாய் லுன் தனிச் சிறப்பு வாய்ந்தவராகத் திகழ்கிறார். பெரும்பாலான கண்டுபிடிப்புகள், அந்தந்தக் காலத்திய ஒரு விளை பொருள் ஆகும். அவற்றை உண்மையில் கண்டுபிடித்தவர்கள் தோன்றாமலிருந்தால் கூட, அவை கண்டுபிடிக்கப் பட்டிருக்கும். ஆனால், இந்த உண்மை காகிதத்தைப் பொறுத்தவரையில் நிச்சயமாகப் பொருந்தாது. சாய் லுன் காகிதத்தைக் கண்டுபிடித்த 1000 ஆண்டுகளுக்குப் பின்னர் தான் ஐரோப்பியர்கள் காகிதம் தயாரிக்கலானார்கள். சீனர்கள் காகிதம் தயாரிப்பதைப் பார்த்த பிறகுங்கூட மற்ற ஆசிய மக்கள் தாங்களே காகிதம் தயாரிக்கும் முறையைக் கண்டு பிடிக்கவில்லை. காகிதம் தயாரிக்கும் முறையைக் கண்டுப் பிடிப்பது உண்மையிலேயே மிகக் கடினமானதாக இருந்தது. ஓரளவு முன்னேற்றமடைந்த ஒரு பண்பாட்டில் யார் வேண்டுமானாலும் அதை கண்டுபிடிக்கக் கூடியதாக இல்லை. அருந்திறம் வாய்ந்த ஒருவரால் தான் அது கண்டு பிடிக்கப்படத்தக்கதாக இருந்தது. அத்தகைய அறந்திறம் வாய்ந்தவராக சாய் லுன் திகழ்ந்தார். காகிதம் தயாரிப்பதற்கு அவர் கையாண்ட அதே முறை தான் (1800 வாக்கில் எந்திரமுறை புகுத்தப்பட்ட பின்னரும்) அடிப்படையில் மாற்றமின்றி இன்றும் கையாளப்படுகிறது.

இந்தக் காரணங்களினாலேயே, இந்த நூலில் முதல் பத்துப் பேர்களில் கூட்டன்பர்க், சாய் லுன் இருவரும் இடம் பெறத் தக்கவர்கள் என்றும், அவ்விருவரில் சாய் லுன், கூட்டன்பர்க்குக்கு முன்னர் இடம் பெறத் தக்கவர் என்றும் கருதுகிறேன்.